சீனா - தைவான் விவகாரம் : `நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்' - நழுவிய ட்ரம்ப்
ரஷ்யாவிடமிருந்து (சோவியத் யூனியன்) பிரிந்து சென்ற உக்ரைன் போல சீனாவிடமிருந்து பிரிந்து சென்றது தைவான். ஆனால், இன்றளவும் உக்ரைனை ரஷ்யா சொந்தம் கொண்டாடுவதுபோல தைவனை சீனா சொந்தம்கொண்டாடுகிறது. இந்த விவகாரம் நீண்ட காலமாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 1979-ம் ஆண்டில் அமெரிக்கா தைவானின் தலைநகர் தைபேயிலிருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு இராஜதந்திர அங்கீகாரத்தை மாற்றிக்கொண்டது. தைவானின் முறையான சுதந்திர அறிவிப்பையும் ஆதரிக்கவில்லை என்பதே அமெரிக்காவின் நீண்டகால கருத்து. அதே நேரம், தைவான் தன்னைத் தற்காத்துக்கொள்ள எல்லா உரிமையும் உண்டு எனக் கூறும் அமெரிக்கா, தற்காப்பு சட்டத்தின் கீழ் தைவானுக்கு ஆதரவாளராகவும், ஆயுத சப்ளையராகவும் உறவைத் தொடர்கிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், ``சீனா தைவானைத் தாக்கினால் அமெரிக்கப் படைகள் தைவானைப் பாதுகாக்கும்" என்றார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் அப்போது தைவான் சென்று வந்தார். இதெல்லாம் அப்போது பெரும் பேசுபொருளாகவும், சீனாவின் கண்டனத்துக்கும் உள்ளானது. இந்த நிலையில், உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் உறுதியாக கருத்து தெரிவிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் சீனா - தைவான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ``சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு வரிகளை விதித்த போதிலும், எல்லை தாண்டிய முதலீடு உட்பட சீனாவுடன் நல்ல உறவுகளை வைத்திருக்க விரும்புகிறது அமெரிக்கா. சீனா தைவானை வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்த அமெரிக்கா அனுமதிக்குமா என்ற கேள்விக்கு நான் ஒருபோதும் கருத்து தெரிவிக்க மாட்டேன். நான் என்னை ஒருபோதும் அந்த நிலையில் வைக்கவிரும்பவில்லை." எனக் குறிப்பிட்டு உரிய பதிலளிக்காமல் நழுவியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
