சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு! துப்பாக்கியுடன் மிரட்டிய காவலாளி கைது!
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது. மேலும் சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியை நீட்டி காவல்துறையினரை மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விஜயலட்சுமி இந்த புகாரை திரும்பப் பெற்றபோதிலும் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்பினர்.
இதையும் படிக்க | அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து!
சம்மன் அனுப்பியபடி சீமான் இன்று ஆஜராகாத நிலையில் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் சம்மன் ஒட்டினர். நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது துப்பாக்கியுடன் நின்ற காவலாளி, நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததுடன் துப்பாக்கியை நீட்டி மிரட்டியதால் அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
காவல்துறையினரை தாக்க முற்பட்டதாகவும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் போலீசார் புகார் கூறியுள்ளனர்.
அதேநேரத்தில் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் காவல்துறையினருக்கு எதிராக செயல்பட்ட காவலாளிக்காகவும் சம்மனை கிழித்ததற்கும் சீமானின் மனைவி கயல்விழி, காவல் நிலைய ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்
இதையும் படிக்க | ஹிந்தி, எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது தெரியுமா? - முதல்வர் மு.க. ஸ்டாலின்