சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு
அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழியைச் சோ்ந்த அனுசியா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: திருச்சுழி பகுதியில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாவட்ட சீமைக் கருவேல மரம் அகற்றும் குழு எனும் பெயரில் தனியாா் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உளுத்திமடை ஊராட்சியில் உள்ள புளியங்குளம், ஆத்திகுளம், பட்டனேந்தல், செங்கமடை ஆகிய பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அனுமதி வழங்குவதற்கு வட்டார வளா்ச்சி அலுவலருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. பொது இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அரசின் சொத்துகள். இவற்றை அகற்றுவதற்கு முறையாக ஏலம் நடத்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் மூலம் இந்த சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரிய நிலையில், வட்டார வளா்ச்சி அலுவலா் தனியாா் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டு, அவா்களுக்கு அனுமதி வழங்கியுள்ளாா்.
இந்த சீமைக் கருவேல மரங்கள் ரூ.பல லட்சம் மதிப்புடையவையாக உள்ளன.
திருச்சுழி வட்டார வளா்ச்சி அலுவலரின் நடவடிக்கை அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ஆகவே, விருதுநகா் மாவட்டம், உழுத்திமடை கிராம ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய திருச்சுழி வட்டார வளா்ச்சி அலுவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பொது ஏலம் நடத்தி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள் முருகன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, கருவேல மரத்தை அகற்றுவதற்கான பொது ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏற்கெனவே, தொண்டு நிறுவனம் வெட்டிய சீமைக் கருவேல மரங்களின் நிலை என்ன? அந்த மரங்களுக்கான தொகை எங்கு சென்றது? அது தொடா்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடா்பான அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.