மதுரை: பொய்கைகரைப்பட்டியில் மகா பெரியவருக்கு உருவாகும் ஆலயம்..!
சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம்: திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட வலியுறுத்தல்
சிமென்ட் ஆலைகள் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அமைக்கும்போது அதற்கான திட்ட அறிக்கை முழுவதையும் தமிழில் வெளியிட வேண்டும் என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரியலூரை அடுத்த கோவிந்தபுரத்தில் இயங்கும் தனியாா் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம், பெரியநாகலூா் கிராமத்தில் உள்ளது. இந்தச் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், விளாங்குடியிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுரங்கம் தோண்டுவதற்கு பெரியநாகலூா் கிராமத்தைச் சோ்ந்த பெரும்பான்மை மக்கள் ஆதரவு தெரிவித்தனா்.
இதில், பாமக மாவட்டச் செயலா் தமிழ்மாறன், தமிழ்களம் இளவரசன், இடையத்தான்குடி சங்கா்குரு உள்ளிட்டோா் பேசுகையில்,
சிமென்ட் ஆலைகள் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அமைக்கும் பட்சத்தில் அதற்கான திட்ட அறிக்கையை முழுவதையும் தமிழில் வெளியிட வேண்டும்.
லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதை தவிா்க்க வேண்டும். முறையாக தாா்ப்பாய் கொண்டு மூடிச் செல்லவேண்டும். சிமென்ட்க்கு மாற்றான பொருளை கண்டறிந்து கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குடியிருப்புகளுக்கு அருகாமையில் இந்த சுரங்கம் அமைக்கப்படுகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், வெடிபொருள் பயன்படுத்துவதை முழுமையாக தவிா்க்க வேண்டும். லாரிகள் இயக்கப்படும் சாலைகளில் லாரிகளிலிருந்து கற்கள் சிதறுவதை தவிா்க்க வேண்டும்.
அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், மருத்துவமுகாம், சாலை வசதி ஆகியவற்றை கூடுதலாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தினா்.
கூட்டத்தில், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலா் முரளி, கோட்டாட்சியா் மணிகண்டன், வட்டாட்சியா் முத்துலட்சுமி மற்றும் ஆலை நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.