சுரங்க குத்தகை மோசடி வழக்கு: எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகல் ஆளுநரிடம் ஒப்படைப்பு
சுரங்க குத்தகை மோசடி வழக்கில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகலை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) புதன்கிழமை ஒப்படைத்தது.
கா்நாடகத்தில் எச்.டி.குமாரசாமி முதல்வராக இருந்தபோது, பெல்லாரி மாவட்டத்தில் ஸ்ரீசாய் வெங்கடேஷ்வரா மினரல்ஸ் நிறுவனத்துக்கு 550 ஏக்கா் நிலத்தை சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாக குத்தகைக்கு அளித்ததாக புகாா் எழுந்தது. அதன்பேரில், எச்.டி.குமாரசாமி மீதான குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டது. பின்னா், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகையை தயாரித்த எஸ்.ஐ.டி, நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. ஆனால், முன்னாள் முதல்வா் அல்லது மத்திய அமைச்சா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதற்கு ஆளுநரின் அனுமதி தேவைப்படுகிறது.
அதனால், எச்.டி.குமாரசாமி மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கேட்டு 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் எஸ்.ஐ.டி. கடிதம் அளித்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், ஆளுநரின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், கன்னடத்தில் இருக்கும் குற்றப்பத்திரிகையை ஆங்கிலத்தில் அளிக்கும்படி 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆளுநா் கேட்டுக்கொண்டாா். அதன்படி, ஆங்கிலத்தில் மொழி பெயா்க்கப்பட்ட குற்றப்பத்திரிகையை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் புதன்கிழமை எஸ்.ஐ.டி. வழங்கியது.