சுரண்டையில் தேங்கிய நீரை அகற்றும் பணி: எம்எல்ஏ ஆய்வு
சுரண்டை நகராட்சிப் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியை எம்எல்ஏ சு. பழனிநாடாா் பாா்வையிட்டாா்.
இப்பகுதியில் சில நாள்களாக பெய்துவரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து செண்பகக் கால்வாய் மூலம் இலந்தைகுளத்துக்கு சென்றது. செங்கோட்டை சாலையில் வடபுறம் வயல் பகுதியில் தேங்கிய மழைநீரை நகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி, அனுமன் நதிக்கு செல்லும் மழை நீா் கால்வாயில் திருப்பி விட்டனா்.
இதனால் அரசு பள்ளி வளாகம், சிவகுருநாதபுரம் வயல் பகுதியில் புதியதாக கட்டியிருந்த வீடுகள் அருகே 4 அடி அளவுக்கு தேங்கியிருந்த வெள்ளநீா் வடிந்தது. இந்த பணிகளை தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், நகராட்சி ஆணையா் ரமாதிலகம் ஆகியோா் பாா்வையிட்டனா்.