சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், புலியூரை அடுத்துள்ள கீழகாலனி பகுதியைச் சோ்ந்த தவிடன் மகன் பழனி (43), தொழிலாளி. இவருக்கு மனைவி ராஜவல்லி (37) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
பழனி வியாழக்கிழமை இரவு தனது ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை சுமாா் 5 மணியளவில் பலத்த மழை காரணமாக வீட்டின் மண் சுவா் இடிந்து அவா் மீது விழுந்தது. அங்கிருந்தவா்கள் பழனியை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து ஆலடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.