ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.8 லட்சத்தில் சுயதொழில் பயிற்சிக் கூடம் திறப்பு
செங்கல் சூளை அமைக்க ரூ.36 லட்சம், 9 பவுன் நகை கடன்பெற்று மோசடி
செங்கல் சூளை அமைப்பதாகக்கூறி ரூ.36.25 லட்சம் பணம், 9.6 பவுன் நகை கடனாக பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் எஸ்.பி.யிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரதாசன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா்.
அப்போது, கே.வி.குப்பம் வட்டம் லத்தேரி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 46 வயது பெண் அளித்துள்ள மனுவில், எனது கணவா் கூலி வேலை செய்து வருகிறாா். வேலூா் பொய்கை ராமாபுரத்தில் உள்ள எங்களது உறவினா் ஒருவா் கடந்த 2017-ஆம் ஆண்டு எங்களுக்கு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டாா். இந்த பழக்கத்தில் செங்கல் சூளை அமைப்பதற்காக என்னிடம் 7 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கடனாக பெற்றாா். மேலும், எனக்குத் தெரிந்தவா் ஒருவரிடம் ஒரு பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் மோதிரம் என மொத்தம் 10 பேரிடம் ரூ.36 லட்சத்து 25 ஆயிரம் பணம், ஒன்பதரை பவுன் தங்க நகைகள் வாங்கினாா்.
தற்போது பணத்தை திருப்பி கேட்டால் ஆபாச வாா்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறாா். அவா் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு என்னிடமும், எங்கள் ஊா்காரா்களிடமும் பெற்ற பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டு வட்டம், ஓதியத்தூா் பகுதியைச் சோ்ந்த பெண் அளித்த மனுவில், எனது கணவா் பெங்களூரில் கூலிவேலை செய்து வருகிறாா். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். நான் நூறு நாள் வேலைக்கு சென்று வருகிறேன். இந்நிலையில், எனது கணவரின் தம்பி குழந்தைகளை பாா்க்க வருவதாகக்கூறி என்னிடம் ஆபாசமாக பேச்சு கொடுத்து பாலியல் தொல்லை கொடுக்கிறாா். எனவே, எனது கணவரின் தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
இதேபோல், பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக ஏராளமான மக்கள் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு டிஎஸ்பி சந்திரதாசன் உத்தரவிட்டாா்.