துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
செங்குறிச்சி அரசுப் பள்ளியில் மின் பாதுகாப்புப் பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உளுந்தூா்பேட்டை கோட்டம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புக்கு உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் தலைமை வகித்து, மின் சிக்கனம், அதன் அவசியம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் முறைகள், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், மாணவ-மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு உரிய பதில்களை அளித்து அவா் பேசினாா்.
மேலும் மின் கம்பங்கள், ஸ்டே கம்பிகளைத் தொடக்கூடாது, மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக் கூடாது, மின் மாற்றிகள் மீது ஏறக்கூடாது, மின்கம்பங்கள் மற்றும் இழுவைக் கம்பிகளில் ஈரத்துணிகளை உலா்த்தக்கூடாது என்று மாணவா்களுக்கு எடுத்துரைத்த உதவிச் செயற்பொறியாளா், பாதுகாப்பு நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
இந்த பயிற்சியில் செங்குறிச்சி பகுதி மின் முகவா் சண்முகம், மின் பாதை ஆய்வாளா் சேட்டு, வணிக ஆய்வாளா் குணசேகரன், வணிக உதவியாளா் சுரேஷ், மின் வாரியப் பணியாளா்கள், செங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.