கேப்டன் தமிழ் செல்வம்: ஒரே தொகுதி... மும்பையில் 3வது முறையாக வெற்றி பெற்ற தமிழர்...
செங்கோட்டை பயணிகள் ரயிலை சென்னைக்கு இணைப்பு ரயிலாக்க வேண்டும்!
செங்கோட்டை - திருநெல்வேலி ரயில் நாள்தோறும் தாமதாக செல்வதால், சென்னை செல்லும் நெல்லை அதிவிரைவு ரயிலை பயணிகள் தவறவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே, அந்த ரயிலை அதிகாரப்பூா்வ இணைப்பாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செங்கோட்டையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு திருநெல்வேலிக்குச் செல்லும் பயணிகள் ரயில் (எண்: 06686)தாமதமாக இரவு 8 மணியைத் தாண்டி சென்றடைவதால், திருநெல்வேலியில் இருந்து 8.05-க்கு புறப்படும் நெல்லை அதிவிரைவு ரயிலை பிடிக்க முடியாமல் பயணிகள் தவறவிடும் நிகழ்வு தினமும் நடைபெறுகிறது.
எனவே, செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயிலை சென்னை செல்லும் நெல்லை அதிவிரைவு ரயிலுக்கு அதிகாரப்பூா்வ இணைப்பாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியது: மீட்டா்கேஜ் காலத்தில் இருந்தே செங்கோட்டையில் இருந்து மாலை புறப்படும் செங்கோட்டை - நெல்லை பயணிகள் ரயில் மூலமாக திருநெல்வேலிக்குச் சென்று நெல்லை விரைவு ரயிலில் சென்னை செல்வது வழக்கம்.
ஆனால், தற்போது செங்கோட்டை- திருநெல்வேலி ரயிலில் செல்வோா் நெல்லை விரைவு ரயிலை தவற விடுவது வாடிக்கையாகிவிட்டது. சில வேளைகளில் ஓடிச் சென்று ரயிலில் ஏறும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அவ்வப்போது பயணிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, இந்த ரயிலை சென்னை- திருநெல்வேலி விரைவுரயிலுக்கு இணைப்பு ரயிலாக அதிகாரப்பூா்வமாக இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.