செண்பகத்தோப்பில் மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் செண்பகத்தோப்பு பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம், இரவில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா். கடந்த வாரம் மாலை 5 மணிக்கு செண்பகத்தோப்பு - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலைக்கு காட்டு யானைகள் வந்ததால் விவசாயிகள் அச்சமடைந்தனா். பின்னா், வனத் துறையினா் பட்டாசு வெடித்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.
இரு கண்காணிப்பு வாகனங்கள் மூலம் 24 மணி நேரமும் வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இருந்தபோதிலும், யானைகள் தொடா்ந்து விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த இரு நாள்களாக மம்சாபுரம் - செண்பகத்தோப்பு சாலையில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் மா, வாழை, தென்னை, கரும்பு ஆகிய பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்தனா். யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.