சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் கொடுமை? - போலீஸ் டி.எஸ்.பி மகன் மீது வழக்கு பதிவு
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ஜோஸ் ஜேக்கப். இவரின் மகன் ஆலன். இவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கியிருக்கிறார். இந்தநிலையில் ஆலன், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாப்பிட சென்றார். அப்போது அதே மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருக்கும் மாணவர்கள் கவின், தியானேஷ் ஆகியோர் ஆலனிடம் ஜூனியர் மாணவர்களுக்கு உடனடியாக ஒரு மீட்டிங் இருக்கிறது. அவர்களை அழைத்து வரும்படி கூறியிருக்கிறார்கள். இதையடுத்து ஆலனும், ஜூனியர் மாணவர்களை அழைத்து செல்ல நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது ஏன் மெதுவாக நடந்துச் செல்கிறாய் என்று கூறி கவினும் தியானேஷிம் ஆலனை அடித்து உதைத்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிய ஆலன், அறைக்குள் சென்று கதவை பூட்டியிருக்கிறார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து ஆலன், மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளித்தார். மேலும் இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆலன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதையடுத்து மருத்துவமனையிலிருந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆலனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடலூரிலிருந்து சென்னைக்கு வந்த ஆலனின் பெற்றோர் என்ன நடந்தது என்று மகனிடம் விசாரித்தனர். அப்போது ஆலன், நடந்தச் சம்பவத்தை கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆலனின் அப்பா ஜோஸ் ஜேக்கப், கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரில், "நான் நெய்வேலி என்எல்சியில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய மகன் ஆலன், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று மருத்துவமனையிலிருந்து கிடைத்த தகவலின்படி சிகிச்சையிலிருந்த ஆலனிடம் பேசினோம்.
அப்போது அவர், தானும் தன்னுடைய நண்பனும் விடுதியின் நுழைவு வாயில் படிகட்டில் நின்றுக் கொண்டிருந்தபோது கவின் தியானேஷ் ஆகியோர் மதுபோதையில் தன்னைத் தாக்கியதாகக் கூறினார். மேலும் ராக்கிங் செய்ய ஜூனியர் மாணவர்களை அழைத்துவரும்படி கவினும் தியானேஷிம் கூறியதாக எங்களிடம் தெரிவித்தார். ஆலன் தாக்கப்பட்ட சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி-யில் பதிவாகியிருக்கிறது. மேலும் என் மகன் ஆலனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சப்படுகிறேன். என் மகனைத் தாக்கிய கவின், தியானேஷ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி பயிற்சி மருத்துவர்கள் கவின், தியானேஷ் ஆகிய இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து கீழ்பாக்கம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``மருத்துவக்கல்லூரி மாணவர் ஆலன் தாக்கப்பட்ட சம்பவத்தில் கவின், தியானேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதில் தியானேஷின் அப்பா, டி.ஜி.பி அலுவலகத்தில் டி.எஸ்.பி-யாக பணியாற்றி வருகிறார். சம்பவம் நடந்ததும் கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி விடுதிக்கு சென்று விசாரிக்க சென்றபோது அங்கு எங்களை அனுமதிக்கவில்லை. தற்போது புகார் வந்திருக்கிறது. விசாரணையை தொடங்கியிருக்கிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.