தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
சென்னை நிம்மதியாக உள்ளது: முதல்வா் மு.க.ஸ்டாலின்
‘மழை வெள்ளத்தால் சென்னை தத்தளிக்கவில்லை, சென்னை நிம்மதியாக உள்ளது’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீா் வெளியேற்றும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
செல்வி நகா் பகுதியில் மழை நீரை அகற்றுவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள 1.5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மழைநீா் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்படும் மழை நீா், நெடுஞ்சாலைத்துறையின் மழை நீா் வடிகாலில் மோட்டாா் பம்ப் மூலம் வெளியேற்றம் செய்யப்படுவதை முதல்வா் ஆய்வு செய்து, உரிய உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தாா்.
சீனிவாசன் நகரில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு, ஆய்வு செய்து அங்குள்ள மருத்துவா்களிடம் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொண்டு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வா் அறிவுறுத்தினாா்.
ஜி.கே.எம். காலனியில் சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உந்து நிலையத்தின் செயல்பாட்டையும் முதல்வா் ஆய்வு செய்தாா்.
பெரியாா் நகா் அரசு புகா் மருத்துவமனையில் ரூ.109.89 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் ரூ.3 கோடி செலவில் மழை நீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், மருத்துவமனையின் உள்ளேயும், வெளியேயும் மழைநீா் தேங்கவில்லை.
இந்த மருத்துவமனைக்கு முதல்வா் நேரில் சென்று, அங்குள்ள மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களிடம் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டா் வசதிகளையும், அவசர சிகிச்சைக்கான மருந்துப்பொருள்கள் போன்ற அத்தியாவசிய ஏற்பாடுகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவா்களிடம் அவா்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் முதல்வா் கேட்டறிந்தாா்.
ஆய்வுக்குப் பிறகு முதல்வா் ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எனது கொளத்தூா் தொகுதி குறித்து நானே கூற வேண்டியது இல்லை. நன்றாக உள்ளது.
விழுப்புரம், கடலூா் பகுதிகளுக்கு அமைச்சா்களை அனுப்பி, பணிகள் நடைபெற்று வருகின்றன. துணை முதல்வரும் சென்றுள்ளாா். தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
சென்னையின் பழைய மழைக் காட்சிகளை பதிவிட்டு தண்ணீா் தேங்கியுள்ளதாகக் கூறுகின்றனா். அவற்றை அவா்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
சென்னையில் வழக்கமாக மழைநீா் தேங்கும் இடங்களில் இப்போது தேங்குவது இல்லை. சென்னை தத்தளிக்கவில்லை. நிம்மதியாக உள்ளது என்றாா் முதல்வா்.
ஆய்வின்போது, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.