வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கா் கட்டாயம்: தில்லி போக்குவரத்துத் துறை உத்தரவு
சென்னை: மதுபோதையில் முற்றிய வாய்த்தகராறு; கத்திரிக்கோலால் அண்ணனைக் குத்திக் கொன்ற தம்பி!
சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேலன். இவரின் வீட்டின் தரைதளத்தில் மணிப்பூரைச் சேர்ந்த ரபேகா, அவரின் ஆண் நண்பர் பவுமிலியன் (28), அவரின் அண்ணன் காய்சுவலியன் (32) ஆகியோர் வசித்தனர். கடந்த 20 நாள்களுக்கு முன்பு ரபேகா, சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அதனால் வீட்டில் சகோதரர்கள் பவுமிலியன், காய்சுவலியன் ஆகியோர் தங்கியிருந்தனர். மதுபோதையில் இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். 3.11.2024-ம் தேதி காலையில் பவுமிலியனுக்கும் காய்சுவலியனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த காய்சுவலியன், தன்னுடைய தம்பி பவுமிலியனை அவதூறாக பேசியுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த பவுமிலியன், அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து காய்சுவலியனின் மார்பு பகுதியில் ஓங்கி குத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த காய்சுவலியன், உயிருக்குப் போராடினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் செந்தில்வேலன், திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் காய்சுவலியனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணனை கொலை செய்த குற்றத்துக்காக பவுமிலியனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.