மழைக்காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை! - மின்சாரத் துறை அறிவுறுத்தல்
சென்னை: மனைவியின் ஆசையை நிறைவேற்ற செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்
சென்னை தாம்பரம், கிருஷ்ணா நகர் முல்லை தெருவில் குடியிருந்து வருபவர் மோகன் குமார் (39). கார் டிரைவராக உள்ளார். இவரின் மனைவி பிரியங்கா (36). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசை ஆசையாக பிரியங்காவுக்கு 4 சவரனில் தாலிச் செயினை வாங்கிக் கொடுத்தார் மோகன்குமார். சம்பவத்தன்று வீட்டில் பிரியங்கா தனியாக இருந்தார். அப்போது வீட்டில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. உடனே பிரியங்கா கதவை திறந்து பார்த்தார். அப்போது வாசலில் நின்றுக் கொண்டிருந்தவர், கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து பிரியங்காவின் முகத்தில் வீசியுள்ளார். அதனால் கண் எரிச்சலில் பிரியங்கா அலறி துடித்த சமயத்தில் அவர் அணிந்திருந்த தாலிச் செயினைப் பறித்து விட்டு அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுவிட்டார்.
அதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்கா, திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். அதைக் கேட்டு அந்தப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து பெருங்களத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸார் பிரியங்காவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில இளைஞர் எனத் தெரியவந்தது. அதனால் பெருங்களத்தூர் போலீஸார், சென்னையில் உள்ள ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்அடிப்படையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெருங்களத்தூர் போலீஸார் கூறிய அடையாளங்களுடன் வடமாநில இளைஞர் ஒருவர் காத்திருந்தார். உடனே அவரைப் பிடித்து விசாரித்தபோது அந்த நபர்தான் பிரியங்காவின் தாலிச் செயினைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பெருங்களத்தூர் போலீஸாரிடம் அந்த வடமாநில இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவரின் பெயர் ராம் மிலன் (33) என்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர், பிரியங்காவின் வீட்டின் அருகில் வாடகைக்கு தங்கி உள்ளார். கைது செய்யப்பட்ட ராம் மிலனிடம் விசாரித்த போது தன்னுடைய மனைவி நீண்ட காலமாக தங்கத்தில் செயின் கேட்டதாகவும் அதை வாங்க பணம் இல்லாததால் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...