பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
சென்னை: மாமூல் கேட்டு தகராறு... தட்டிக்கேட்ட பெண் வியாபாரி கழுத்தறுத்து கொலை - என்ன நடந்தது?
சென்னை திருவொற்றியூர், சன்னதி தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் பழம் வியாபாரம் செய்து வந்தவர் கௌரி (45). இவர் வழக்கம் போல கடந்த 12-ம் தேதி பிளாட்பாரத்தில் பழம் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கோயிலுக்கு வரும் பெண்களிடம் ஒருவர் மது அருந்த பத்து ரூபாய் தரும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். அதைப் பார்த்த கௌரி, எதற்காக பெண்களிடம் பணம் கேட்கிறாய்? என்று தட்டிக் கேட்டிருக்கிறார். உடனே அந்த நபர், என்னிடமே கேள்வி கேட்கிறாயா? என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர் அங்கு கத்தியுடன் வந்த அந்த நபர், கௌரியின் கழுத்தை அறுத்துள்ளார். அதனால் அலறி துடித்த கௌரியை அவரின் கணவர் மாரி (55) காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கும் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மதுபோதையிலிருந்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கௌரியையும் அவரின் கணவர் மாரியையும் மீட்ட அந்தப்பகுதி மக்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கௌரியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதனால் கௌரியின் குடும்பத்தினரும் பிளாட்பாரத்தில் வியாபாரம் செய்து வந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மதுபோதையில் கொலை செய்தவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் பர்மா சேகர் என்றும் அதே பிளாட்பாரத்தில் தங்கியிருப்பவர் என்றும் தெரியவந்தது. இவர் இதற்கு முன்பு திருவொற்றியூரில் குடியிருந்து வந்திருக்கிறார். தொடர்ந்து சேகரிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதம், தான் வழக்கமாக படுத்துறங்கும் பிளாட்பாரத்தில் கொலை செய்யப்பட்ட கௌரி இயற்கை உபாதை கழித்திருக்கிறார்.
அதுதொடர்பாக கௌரிக்கும் பர்மா சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கௌரி, செருப்பால் பர்மா சேகரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த முன்விரோதம் காரணமாக கௌரியை பர்மா சேகர் கொலை செய்ததாக கூறியிருக்கிறார். ஆனால் அங்குள்ள வியாபாரிகளோ, மாமூல் கேட்ட தகராறை தட்டிக் கேட்ட சம்பவத்தில் கௌரி கொலை செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். இருப்பினும் விசாரணையின் முடிவில்தான் என்ன நடந்தது என்று தெரியவரும் என்கிறார்கள் போலீஸார். விசாரணைக்குப்பிறகு சேகரை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.