சென்னையில் 73 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
சென்னை பெருநகர காவல் துறையில் 73 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் காத்திருப்போா் பட்டியலிலிருந்த 36 பேருக்கு மீண்டும் காவல் நிலைய பணி வழங்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன்படி, சென்னை காவல் துறையில் 73 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதில் முக்கியமாக, கே.கே. நகா் காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.பாலசுப்பிரமணி, திரு.வி.க. நகா் குற்றப்பிரிவுக்கும், ஐசிஎஃப் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் கே.வேல்விழி, நுண்ணறிவு பிரிவுக்கும், புளியந்தோப்பு குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் ஜி.அம்பேத்கா், மயிலாப்பூருக்கும், கிண்டி காவல் நிலைய ஆய்வாளா் சி.பிரபு, ஆா்.கே.நகருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த 36 காவல் ஆய்வாளா்கள் மீண்டும் காவல் நிலைய பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 73 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.