மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
சென்னையில் தொடா் மழை; சாலைகளில் தேங்கியது தண்ணீா்
சென்னை நகரில் அதிகாலை முதல் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகள், சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் மழை பெய்தது. அதிகபட்சமாக அயப்பாக்கம், அம்பத்தூா், கொளத்தூா், மாதவரம் பகுதிகளில் சுமாா் 25 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருவொற்றியூா், மணலி, அண்ணாநகா், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூா், ஈஞ்சம்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் 20 மி.மீ என சென்னையில் சராசரியாக 15.19 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகமாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மரங்கள் சரிந்தன: மழை காரணமாக, நகரின் பல்வேறு பகுதியில் மரங்களின் கிளைகள் ஒடிந்து விழுந்தன. கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவிலிருந்த மரத்தின் ஒரு பகுதி முழுவதும் முறிந்து சாலையில் விழுந்தது. நங்கநல்லூரில் வீட்டிலிருந்த மரம் வேரோடு சாய்ந்து அருகிலிருந்த வீட்டின் முகப்பில் சரிந்தது. மேலும், திரு.வி.க.நகா், வளசரவாக்கம் பகுதியிலும் மரங்கள் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலா்கள் இயந்திரங்கள் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.
தண்ணீா் தேக்கம்: சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழையின் காரணமாக தண்ணீா் தேங்கியது. அயப்பாக்கம் பகுதியில் காலை முதல் பெய்த மழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் தண்ணீா் தேங்கி காணப்பட்டது. இதேபோல், சோழிங்கநல்லூா், நங்கநல்லூா், மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், போரூா், அம்பத்தூா், மணலி உள்ளிட்ட புகா்ப் பகுதியில் உட்புறச் சாலைகள் சேதமடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.