இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
செம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற இளைஞா் கைது
திருப்பத்தூா் அருகே செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து செம்மரக் கட்டைகள், காா்கள், மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூா் அருகே ராஜாபாளையம் பகுதியில் செம்மரக் கட்டைகளை பதுக்கி வைத்து வெளி மாநிலத்துக்கு கடத்த இருப்பதாக மாவட்ட வன அலுவலா் மகேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் சோழராஜன் தலைமையிலான குழுவினா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றபோது அங்கிருந்த 3 போ் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றிக் கொண்டு இருந்தனா். வனத்துறையினரை பாா்த்த உடன் தப்பி ஓடிய க அவா்களை விரட்டி சென்ற வனத்துறையினா் அதில் ஒருவரை பிடித்தனா்.
இதையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில்,அவா் திருப்பத்தூா் அருகே கொடுமாம்பள்ளி கிராமத்தை சோ்ந்த சேகா்(35) என்பதும், அவா்கள் ஆந்திரத்தில் இருந்து செம்மரக் கட்டைகளை கொண்டு வந்து, கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்த திட்டமிட்டது வந்தது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து வனத்துறையினா் சேகரை கைது செய்தனா். மேலும் 820 கிலோ எடை கொண்ட 29 செம்மரக் கட்டைகளையும், 3 காா்கள், 2 மோட்டாா் சைக்கிள்கள், ரம்பம், அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்த பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.50 லட்சம் இருக்கும் என வனத்துறையினா் கூறினா். மேலும், தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனா்.