Bihar Results: ``முழுக்க முழுக்க கட்சிக் கட்டமைப்பின் தோல்வி" - காங்கிரஸ் தலைவர்...
செல்போன் செயலி மூலம் பழக்கம்; வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டிய நபர் - கைதுசெய்த போலீஸ்!
சென்னையைச் சேர்ந்த 21 வயதாகும் இளம்பெண்ணுக்கு செல்போன் செயலி ஒன்று மூலம் லிபின்ராஜ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஒருகட்டத்தில் இளம்பெண்ணை லிபின்ராஜ் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். அதன்பிறகு இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்திருக்கிறார்கள். அவ்வப்போது வீடியோ காலிலும் இருவரும் ஆபாசமாக பேசியிருக்கிறார்கள். அதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் லிபின்ராஜ் தன்னுடைய செல்போனில் ரெக்கார்டு செய்து வைத்திருந்திருக்கிறார்.

இதற்கிடையில் இருவரும் தனிமையிலும் சந்தித்திருக்கிறார்கள். அதையும் இளம்பெண்ணுக்குத் தெரியாமல் லிபின்ராஜ் தன்னுடைய செல்போனில் வீடியோ, போட்டோஸ்களாக எடுத்து வைத்திருக்கிறார். இப்படியே இருவரும் பழகிவந்த நிலையில் இளம்பெண்ணுக்கு லிபின்ராஜின் சுயரூபம் தெரியவந்திருக்கிறது. அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், லிபின்ராஜிடம் வாக்குவாதம் செய்ததோடு அவரோடு போனில் பேசுவதையும் தவிர்த்து வந்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த லிபின்ராஜ், இளம்பெண்ணின் ஆபாச உரையாடல்கள், சில போட்டோஸ்களை அனுப்பி வைத்து மிரட்ட தொடங்கியிருக்கிறார்.
இந்தநிலையில்தான் இளம்பெண்ணை மிரட்ட அவரின் தனிப்பட்ட போட்டோஸ்கள், வீடியோக்களை இளம்பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் லிபின்ராஜ். அதைப்பார்த்த இளம்பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததோடு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லிபின்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதனால் லிபின்ராஜை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனை சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், கைதான லிபின்ராஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆட்டோ ஒட்டி வரும் லிபின்ராஜ், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இளம்பெண்ணின் பாட்டி உயிரிழந்த சமயத்தில் அவரை தனியாக சந்திக்க லிபின்ராஜ் கட்டாயப்படுத்தியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் லிபின்ராஜ், அந்தரங்க போட்டோஸ், வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியிருக்கிறார். அதன்பிறகே லிபின்ராஜ் குறித்து எங்களிடம் இளம்பெண் தரப்பு புகாரளித்ததன் பேரில் அவரைக் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

















