ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.8 லட்சத்தில் சுயதொழில் பயிற்சிக் கூடம் திறப்பு
செவிலிமேட்டில் ரூ. 100 கோடியில் புதிய மேம்பால பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு
காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே ரூ. 100 கோடியில் பாலாற்றின் குறுக்கே புதிய உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே ரூ. 100 கோடியில் பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி குறித்து மாநில நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் செல்வகுமாா் தலைமையில் ஆய்வு செய்தனா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையானது திருச்சி, மதுரை, ராமேசுவரம் உள்ளிட்டதென் மாவட்டங்களுக்கு செல்லும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாகும். தினசரி அதிகமான வாகனப் போக்குவரத்து உள்ள சாலையாகவும் இருந்து வருகிறது. இந்தப் பிரதான சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் பாலாற்றின் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் நலனுக்காக கட்டப்பட்ட மேம்பாலம் இருந்து வருகிறது. இந்தப் பாலத்தில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுப் போக்குவரத்துக்கு காலதாமதம் ஆவதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பலரும் குற்றம் சாட்டி வந்தனா்.
இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையின் சாா்பில், அப்பகுதியில் மேலும் ஒரு உயா்மட்ட மேம்பாலம் கட்டி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அதிகாரிகளால் திட்டமிடப்பட்டது. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் செல்வகுமாா் ஆலோசனையின் படி, கோட்டப் பொறியாளா் முரளீதரன் தலைமையில் திட்ட மதிப்பீடு மற்றும் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, அது மாநில நெடுஞ்சாலைத் துறையின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தத் திட்ட மதிப்பீடு பொதுமக்கள் நலன் கருதி ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இதற்கான பணிகள் துவக்கம் மற்றும் பணிகளை மேற்கொள்ள காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் மாநில நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளா் செல்வகுமாா் தலைமையியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, காஞ்சிபுரம் கோட்டப் பொறியாளா் முரளீதரன், உதவி கோட்டப் பொறியாளா் இளங்கோ, உதவிப் பொறியாளா் விஜய் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உடன் இருந்தனா்.