மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
சேரன்மகாதேவி, முக்கூடல் பகுதிகளில் 19 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, முக்கூடல் வட்டாரங்களில் 19 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
இதுதொடா்பாக சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேரன்மகாதேவி வட்டாரத்தில் நிகழ் பிசான பருவத்தில் 3,900 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்று, அறுவடைக்கு தயாராக உள்ளது. விவசாயிகள் நல்ல லாபம் பெறும் நோக்கில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், என்சிசிஎஃப் மூலம் சேரன்மகாதேவி வட்டாரத்தில் பத்தமடை, சேரன்மகாதேவி, வடக்கு காருகுறிச்சி, வடக்கு - தெற்கு வீரவநல்லூா், மேலச்செவல், கோபாலசமுத்திரம், கரிசல்பட்டி, பொட்டல், கல்லிடைக்குறிச்சி ஆகிய 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சன்ன ரக நெல் கிலோ ரூ. 24.50-க்கும் மோட்டா ரகம் ரூ. 24.05-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் இக்கொள்முதல் நிலையங்களில் நெல்லைக் கொடுத்து உரிய விலையைப் பெறலாம் என்றாா் அவா்.
பத்தமடையில் கொள்முதல் நிலையத்தை சேரன்மகாதேவி ஒன்றிய திமுக செயலா் ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு தொடக்கிவைத்தாா். நகரச் செயலா் சிந்தாமதாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனனா்.
முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முக்கூடல் வட்டாரத்தில் நிகழாண்டு 8 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. இவ்வட்டாரத்தில் மேலக்கல்லூா், திருப்புடைமருதூா், அரிகேசவநல்லூா், அத்தாளநல்லூா், சீதபற்பநல்லூா், பாப்பாக்குடி, பள்ளக்கால் பொதுக்குடி, பனையங்குறிச்சி, வடக்கு அரியநாயகிபுரம் ஆகிய 9 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் 17 சதவீதத்துக்குள்பட்ட ஈரப்பதமுள்ள நெல்லுடன் உரிய ஆவணங்களை வழங்கி பயனடையலாம் என்றாா் அவா்.