சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக பெங்களூரு -திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்
பெங்களூரிலிருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பண்டிகைக் காலம் மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே திங்கள், புதன்கிழமைகளில் இருமறுமாா்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
அந்த வகையில், பெங்களூரிலிருந்து திங்கள், புதன்கிழமைகளில் வரும் 11 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். பெங்களூரிலிருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும்.
மறுமாா்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய், வியாழக்கிழமைகளில் வரும் 12 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 16 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு பெங்களூரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.