செய்திகள் :

சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

post image

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்குபெறுவீர்களா? – தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்தக் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த பதில் – யெஸ்!

அவ்வளவுதான். அதிமுக – பா.ஜ.க. தலைவர்களிடையே மறுபடியும் சுடச்சுடப் பற்றிக் கொண்டுவிட்டது கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு பற்றிய விவாதம்.

1998 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா இருந்தபோது முதல்முறையாக அதிமுக – பாஜக கூட்டணி அமைய, 30 தொகுதிகளை வென்றது. ஆனால், உறவு கசக்க, அதே அதிமுக ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டதால்தான் பிரதமர் வாஜபேயி ஆட்சி கவிழ்ந்தது. 1999-ல் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி.

2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி. ஆனாலும் வாஷ் அவுட்! 2016-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏராளமான அரசியல் மாற்றங்கள், காய் நகர்த்தல்கள்! தொடர்ந்து வந்த முதல்வர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் அரசுகள், தான் நினைவுடன் இருக்கும் வரை ஜெயலலிதா எதிர்த்தும்  நிராகரித்தும்வந்த பல பிரச்சினைகளில் மத்தியிலுள்ள பாரதிய ஜனதா அரசுடன் இணங்கிப் போய்விட்டன.  2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி உருவானது. ஆனால், இப்போதும் வெற்றிக் கூட்டணி அல்ல. ஒரே ஒரு தொகுதியில்தான் அதிமுக வென்றது. பாஜகவுக்கு சுழியம்.

ஆனாலும் கூட்டணி தொடர, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. அதிமுகவுக்கு 75 தொகுதிகளும் பாஜகவுக்கு 4 தொகுதிகளும் கிடைத்தன. தொடர்ந்து, இரு கட்சிகள் இடையிலும் புகையத் தொடங்கி, அண்ணா, ஜெயலலிதா பற்றித் தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை தெரிவித்த கருத்து போன்றவற்றால் 2023 செப்டம்பரில் கூட்டணியே உடைந்துவிட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டுத் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இவ்விரு கட்சிக் கூட்டணிகளும் தோற்றன.

2014 மக்களவைத் தேர்தலில் கடுமையான போட்டியில், ‘லேடியா? மோடியா? தமிழ்நாட்டில் எப்போதுமே லேடிதான்’ என்று பிரசாரம் செய்தார் ஜெயலலிதா,  சொன்னபடியே வென்றும் காட்டினார்.

ஆனால் என்ன, 2016-ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏதோவொரு வகையில் பாரதிய ஜனதாவை அல்லது மத்திய ஆட்சி அதிகாரத்தைச் சார்ந்து அல்லது பகைத்துக் கொள்ளாமல் இருக்க நேரிட்டுவிட்டது அதிமுகவினருக்கு.

கடைசியாகக் கூட்டணியை முறித்துக்கொள்ளும் அறிவிப்பை வெளியிட்ட - 2023 செப்டம்பர் 25 ஆம் தேதியில் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் - பாரதிய ஜனதாவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

பாஜகவால் நாம் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவருகிறோம். அவர்களுடன் நாம் கூட்டணி இல்லை என்பதை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்றும் தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய மூத்த மாவட்டச் செயலர்கள் அனைவருமே பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பேசியதாகத்தான் தகவல்கள் வெளியாகின.

கூட்டணியா? இல்லையா? என்பதில் பிடிகொடுக்காமலேயே இருந்துகொண்டிருந்தனர் அதிமுக தலைவர்கள். முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் போன்றோர் பாரதிய ஜனதாவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களையும்  முன்வைத்துக்கொண்டிருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென ஒரு நாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  சென்னை வந்தார். சில நாள்கள் முகாமிட்டார். பேச்சுகள் நடைபெற்றன. ஏப். 11 ஆம் தேதி இணைந்து உயர்ந்த கரங்களுடன், தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சந்திப்போம். தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும் தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படும் என்று அமித் ஷா அறிவித்தார். பின்னர், எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடைபெற்ற விருந்தில் அமித் ஷாவும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு கைநனைத்தனர்.

ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இடம் பெறுவார்களா? என்றபோது, அவர்களின் (அதிமுகவின்) உள்கட்சி விவகாரம் என்றதுடன், பிற கட்சிகளைச் சேர்ப்பது பற்றித் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் அமித் ஷா கூறிவிட்டார்.

கூட்டணி ஆட்சி என்பது விவாதமாகவே, சில நாள்கள் கழித்து, ஏப். 16, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைக்கிற கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்துத் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்கிறோம்; முதல் கட்டமாக பாரதிய ஜனதா இணைந்திருக்கிறது. பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித் ஷா கூறினார்; கூட்டணி அரசு என்று அவர் சொல்லவில்லை, நீங்கள் (செய்தியாளர்கள், அப்படியே மக்கள்) தவறாகப் புரிந்துகொண்டு கேட்கிறீர்கள் என்றொரு விளக்கமளித்தார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி.

அதே நாளில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரனோ, கூட்டணி ஆட்சி பற்றி பாஜகவின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.

விவாதம் தொடர்ந்துகொண்டிருந்தது.

இதனிடையே, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்ற மதுரை ஹிந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் மோசமான விதத்தில் விமர்சித்ததும் கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தங்கத்தில் செய்யப்பட்ட வேல் ஒன்றை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி பரிசாக அளித்ததும் புகைந்துகொண்டிருந்தன.

இந்த சூழ்நிலையில்தான் நேர்காணலில் கூட்டணி ஆட்சி பற்றிய கேள்விக்குப் பதிலாக ஒலித்தது அமித் ஷாவின் ஒற்றைச் சொல், ‘யெஸ்’!

இப்போது மறுபடியும் முதலிலிருந்து...

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அல்ல, அதிமுக ஆட்சிதான் என்ற எடப்பாடி பழனிசாமி, எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும்; ஆனால், அதிமுகதான் தனித்து ஆட்சி அமைக்கும் என்று (ஜூலை 16-ல்) குறிப்பிட்டதுடன், அது கூட்டணி அரசு அல்ல என்றும் கூறினார். கூடவே, இந்தக் கூட்டணிதான் அரசு அமைக்கும். யார் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறார்கள்? அதிமுக. பிறகு அதிகாரப் பகிர்வு பற்றி யார் முடிவு எடுப்பார்கள்? நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று மறுபடியும் பழனிசாமி விளக்கியுள்ளார்.

ஆனால், மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு கொஞ்ச காலமாகப் பேசாமல் இருந்த அண்ணாமலையோ, திடீரென இப்போது, 'அமித் ஷா ஒரு முறை அல்ல, பல முறை தெரிவித்திருக்கிறார். கூட்டணி ஆட்சிதான் என்று அமித் ஷா தெரிவித்தார் என்றால், நான் வேறொரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது; அமித் ஷா கூறியதில் அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அவர்கள் அமித் ஷாவுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்' என்று சுற்றிவிட்டிருக்கிறார்.

ஆனால், அடுத்தாற்போல, ஆங்கில நாளிதழொன்றுக்கு அளித்த நேர்காணலில், தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அல்லது கிடைத்தாலும், அதிமுக வரலாற்றில் முதன்முறையாகக் கூட்டணி அரசை அதிமுக அமைக்குமா? என்ற கேள்விக்கு, ஊகத்தின் அடிப்படையிலான ஒரு  கேள்விக்கு எவ்வாறு என்னால் பதிலளிக்க முடியும்? என்ற எடப்பாடி பழனிசாமி, தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக அரசு அமைக்கும் என்று மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்... ஸப்பா.... ரொம்பவே கண்ணக் கட்டுமே... ஆமா, கட்டத்தான் செய்யும்.

ஏனென்றால் இந்தக் குழப்பம் இன்னமும் தெளியாததால், கூட்டணிக்கு உள்(ளே இருக்கும்)குத்து என்னவென்றும் புரியாததால் அதிமுகவினர் மட்டுமல்ல;  தமிழ்நாட்டின் அரசியலும் அரசியல் கட்சித் தலைவர்களுமே கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறார்கள் போல தோன்றுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு ஓராண்டு காலம் இருக்கும்போதே, இவ்வளவு அட்வான்ஸாக எதற்காக ஒரு கூட்டணி அறிவிப்பு? தொடர்ந்து, ஆட்சியில் பங்கு பற்றிய விவாதம் வேறு. கூட்டணி அறிவிக்கப்பட்டுவிட்டதால், இப்போதிருந்தே நல்லது, கெட்டது என எல்லா விஷயங்களிலும் பா.ஜ.க.வை ஆதரித்துத் தீர வேண்டிய கட்டாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது அதிமுக.

எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணத் தொடக்கத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்  கலந்துகொண்டார். அன்றைக்குக் கூட்டத்தில் எல்லாரும் பேசும்படியாக அதிமுக கொடிகளைவிட பாஜக கொடிகள்தான் அதிகமாகக் காட்சியளித்தன.

தமிழ்நாட்டில் அதிமுக -  பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால், அமையவிருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் நினைக்கிறார்கள்போல (வேறு பல மாநிலங்களிலும் நடந்ததைப் போல). கூட்டணி ஆட்சியில் உடன்பாடில்லை; ஒருவேளை ஒப்புக்கொள்ள நேர்ந்தாலும் தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அதிமுகவினர் நினைப்பதாகக் கூறுகிறார்கள் – எல்லாம் கிசுகிசுப்புகள்தான்.

ஆனால், கூட்டணி ஆட்சி என்றாலே டென்ஷனாக எதிர்வினையாற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி; கூட்டணி ஆட்சியில் இடம் பெறுவோம் என்ற பா.ம.க.வின் அன்புமணி குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, பந்தியில் உட்காரவே வைக்கவில்லை; அதற்குள் இலை ஓட்டை என்றால் எப்படி? என்று நக்கலடித்திருக்கிறார் பழனிசாமி.

தவிர, தேர்தல் கூட்டணி பற்றிய விஷயங்களையும் ஒரு சஸ்பென்ஸிலேயே வைத்திருக்க முயலுகிறார். திடீர் திடீரென அரசியல் கட்சிகளுக்கு அழைப்பும் விடுக்கிறார். கூடவே, கடுமையாக விமர்சனமும் செய்கிறார்.

நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் பேச்சு நடத்துகிறீர்களா? என்ற கேள்விக்கு, எங்களுடைய தேர்தல் திட்டத்தையும் உத்தியையும் வெளிப்படுத்த விரும்பவில்லை என்ற அவர், அதேவேளையில், விஜய் இறங்கிவந்தால் பாஜகவை விட்டுவிட்டு, தவெகவுடன் அணி சேருவீர்களா? என்றதும் ஊகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்கிறார்.

இப்போதைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் பாரதிய ஜனதாவும் இருக்கின்றன. உடன் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸும். ஏற்கெனவே, இந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தவர்கள், குழப்பத்தில் இருக்கிறார்களா, இருப்பதைப் போல காட்டிக் கொள்கிறார்களா தெரியவில்லை.

தேமுதிகவைப் பொருத்தவரை ஜனவரியில் திட்டமிட்டுள்ள கட்சியின் மாநில மாநாட்டுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்களாம். பா.ம.க. – தந்தையும் தனயனுமாகத் தகராறு செய்துகொண்டு தரைக்கும் தண்ணீருக்குமாக இழுத்துக்கொண்டிருக்கின்றனர். தான் எப்போதும் பாஜக பக்கம் என்பதை அவ்வப்போது அன்புமணி கோடிட்டுக்காட்டுகிறார். தந்தை ராமதாஸோ அப்படி இல்லை. கடைசி நேரத்தில் என்ன நடக்குமோ? ஒன்றாக இருக்கப் போகிறார்களா? ஆளுக்கொரு பக்கம் அணி வகுத்துச் செல்வார்களா?

இன்றைய நிலைமையில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. டச் வுட்! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான நிலைப்பாடுதான் இவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி வைத்திருக்கிறது;  கூடவே, அதிமுகவிடமிருந்து ஒதுக்கியும் வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். இருக்கலாம், ஏனென்றால் மக்கள் நலக் கூட்டணி கண்டவர்களில் ஒருவர் அல்லவா? திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் பாரதிய ஜனதாவை எதிர்ப்போம்  என்றிருக்கிறார்.

அதிமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு எதிர்வினையாற்றும் அரசியல் கட்சித் தலைவர்களில் பலரும், தமிழக வெற்றிக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட, பாரதிய ஜனதா கட்சி இருக்குமிடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்றுதான் கூறுகிறார்கள்; ஒருவேளை இல்லாவிட்டால்? யார் யாரெல்லாம் எங்கெங்கே இருக்கப் போகிறார்களோ? மில்லியன் டாலர் கேள்விதான்!

இந்தப் பரபரப்புகளுக்கு இடையே சில கட்சிகள் இரண்டாக உடையத் தயாராகிக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் தருகின்றன; தேவைப்பட்டால் பெரிய கட்சிகள்கூட உடையலாம் / அல்லது உடைக்கப்படலாம். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்தானே! எத்தனை மாநிலங்களில் நடந்திருக்கிறது?

சரி, என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். கொஞ்சம் வேகமாகப் பேசி முடித்து, கூட்டணி ஆட்சியா, இல்லையா? கூட்டணியா, இல்லையா? என்கிற பட்டிமன்ற விவாதப் பொருளையெல்லாம் அண்ணாமலை சொல்வதைப் போல அமித் ஷாவிடமே பேசிகூட கொஞ்சம் சீக்கிரமாகத் தீர்ப்பைச் சொன்னால் வாக்களிக்கப் போகிற சாதாரண மக்களுக்கு நிலைமை கொஞ்சம் தெளிவாகப் புரிந்துவிடும்!

இதையும் படிக்க... சொல்லப் போனால்... ஆதார், வெறும் அட்டைதானா?

Amid BJP ADMK debate on coalition, here are some issues about alliances.

தமிழக சிறைகளில் விரைவில் "டாமினன்ட்' கோபுரங்கள்!கைதிகளின் கைப்பேசி ராஜ்ஜியத்தை ஒழிக்க நடவடிக்கை

தமிழக சிறைகளில் கைப்பேசி சிக்னல்களை முற்றிலுமாக முடக்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் "டாமினன்ட் டவர்ஸ்' என்ற தொழில்நுட்பம் மூலம் இயங்கும் வலையமைப்புக் கோபுரங்கள் (நெட்வொர்க் டவர்ஸ்) அமைக்கப்பட உள்ளன.தமி... மேலும் பார்க்க

காங்கிரஸில் சித்தராமையா சிக்கல்!

'கர்நாடக அரசியலில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புரட்சி வெடிக்கும்' என்று சித்தராமையாவின் தீவிர ஆதரவு அமைச்சரான கே.என்.ராஜண்ணா கூறியதும், அந்த மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதை தொடர்ந்து,... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஆதார், வெறும் அட்டைதானா?

‘ஆதார் அட்டையா? அதெல்லாம் செல்லாது, செல்லாது!’ என்று வெண்ணிலா கபடிக் குழு பரோட்டா சூரி தொனியில் மறுத்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நிலைப்பாட்டால் அதிர்ந்துபோயிருக்கிறார்கள் மக்கள்.இந்த ஆண்டு ... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியா?, கூட்டணி அரசா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சா் அமித் ஷாவின் தோ்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அதிமுகவின் மெளனமும் பாஜக மேலிடத்தின் நிலைப்பாடும் இந... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

நைட் டிரைவ் என்றொரு மலையாளத் திரைப்படம். போலியான வழக்கில் ஒருவரைச் சிக்க வைக்குமாறு ஆய்வாளரிடம் காவல் ஆணையர் தெரிவிப்பார், ‘தலையில் தொப்பி இருக்க வேண்டும் அல்லவா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்ற எச... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...5 மொழி, கலைகள் எப்படி இருந்தன?

மொழியியல்இந்திய இலக்கியம் சில தடைகளை எதிர்கொண்டாலும் பல புதுமைகளைக் கண்டுள்ளன. நவீன எழுத்தாளர்கள் பண்டைய கதைகள் மற்றும் பழக்கவழக்கங்களை குறிப்பாக காலனி ஆதிக்கத்திற்கு எதிராக எழுதியுள்ளனர். கிமு 300ல் ... மேலும் பார்க்க