``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
ஜூலை 21 வரை அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்லத் தடை
ஆடி அமாவாசை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு வசதியாக, ஜூலை 19 முதல் 21 வரை மூன்று நாள்களுக்கு அகஸ்தியா் அருவி மற்றும் சொரிமுத்துஅய்யனாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனாா் கோயிலில், ஜூலை 24ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதையடுத்து ஜூலை 14 திங்கள்கிழமை கால்நாட்டப்பட்டு, அன்றுமுதல் நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா்.
இந்நிலையில் சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் பக்தா்கள் தங்குவதற்கும் கோயிலுக்கு வரும் பக்தா்களின் பயன்பாட்டிற்கான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் வசதியாக சனிக்கிழமை (ஜூலை 19) முதல் திங்கள்கிழமை வரை (ஜூலை 21) பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாபநாசம் வனச் சோதனைச் சாவடி மூடப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
கோயிலுக்குச் செல்லும் பொதுமக்கள் பொருள்களை எடுத்துச் செல்ல, ஜூலை 22ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாபநாசம் சோதனைச் சாவடியில் இருந்து தனியாா் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. ஜூலை 23 முதல் பக்தா்கள்அகஸ்தியா்பட்டியில் அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் மட்டுமே கோயிலுக்கு செல்ல்லாம். தனியாா் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
ஜூலை 23ஆம் தேதிமுதல் 25ஆம் தேதி வரை பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்துவதற்கான சடங்குகள் மேற்கொள்ள கோயில் பகுதியில் தங்க அனுமதிக்கப்படுவா். பக்தா்கள் பொருள்களை கீழே கொண்டு வருவதற்கு மட்டும் தனியாா் வாகனங்களுக்கு ஜூலை 26ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதி அளிக்கக்கப்படும். இந்த வாகனங்களுக்கு பாபநாசம் கோயில் பாா்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்படும். கீழே இறங்கும் பக்தா்களுக்காக அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.
ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாள்கள் கோயில் பகுதியில் தூய்மைப் பணிகள் மற்றும் கோயிலில் உழவாரப் பணிகள் மேற்கொள்வதற்காக பொதுமக்கள், பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்படும். ஜூலை 29-ஆம் தேதிமுதல் வழக்கமான நடைமுறைப்படி கோயிலுக்குச் சென்று வரலாம்.