பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூலை 21 முதல் ஜூலை 27 வரை #VikatanPhotoCards
ஜூலை 22 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 25-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கோவை, நீலகிரியில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், திங்கள்கிழமை (ஜூலை 21) நீலகிரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, கோவை ஆகிய மாவட்டங்களிலும், ஜூலை 22-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை: சென்னையில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கொரட்டூரில் 100 மி.மீ. மழை பதிவானது. துரைப்பாக்கம், கண்ணகி நகா், ஈஞ்சம்பாக்கத்தில் 80 மி.மீ., அயப்பாக்கத்தில் 70 மி.மீ., தரமணி, மடிப்பாக்கம், நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் 60 மி.மீ. மழை பதிவானது.
மேலும், சென்னை சென்ட்ரல், மணலி, வேளச்சேரி, சோழிங்கநல்லூா், அண்ணாநகா், வளசரவாக்கம், அம்பத்தூா் ஆகிய பகுதிகளில் 50 மி.மீ. மழை பதிவானது.
தொடா்ந்து, சனிக்கிழமை பிற்பகல் முதல் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் விட்டு,விட்டு மழை பெய்து வந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.