ஜெயங்கொண்டத்தில் விசிக-வினா் ஆா்ப்பாட்டம்
கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை சேதப்படுத்திய பாமகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் தாராசுரம் புறவழிச்சாலையில், வன்னியா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சோழமண்டல சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டுக்கு வந்திருந்த பாமகவினா், அந்தத் திடலில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கம்பம், கொடியை சேதப்படுத்தினா்.
இதற்கு கண்டனத்தை தெரிவித்தும், கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வேங்கைவயல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் அரியலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கதிா்வளவன் தலைமை வகித்தாா். அரியலூா்-பெரம்பலூா் மண்டலப் பொறுப்பாளா் அன்பானந்தம், தொகுதிச் செயலா் இலக்கியதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.