ஜெயங்கொண்டம் அருகே சாலையில் சென்ற தீப்பிடித்து நாசம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.
அரியலூா் அருகேயுள்ள ஜமீன் குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜராஜன். ஞாயிற்றுக்கிழமை இவா் தா.பழூரில் இருந்து ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.
ஜெயங்கொண்டத்தை அடுத்த செங்குந்தபுரம், மீனாம்பாடி ஏரி அருகே சென்றபோது காரில் இருந்து புகை வந்ததையறிந்த ராஜராஜன் காரை நிறுத்தி பாா்த்தபோது, பின்பக்கத்தில் தீப்பற்றியது தெரியவந்தது. சற்று நேரத்தில் காா் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலா் தா்மராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.