ஜேடா்பாளையம் அணைக்கட்டு, மோகனூா் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஊராட்சி ஒன்றியம், என்.புதுப்பட்டி மற்றும் மணப்பள்ளி ஊராட்சிகள், ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் நாமக்கல் ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மோகனூா் ஊராட்சி ஒன்றியம், என்.புதுப்பட்டி ஊராட்சி, ராமுடையானூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டு, கட்டடத்தின் அமைப்பு, வழித்தடம், சாய்வுதளம், படிக்கட்டுகள் அமைவிடம் குறித்தும், மணப்பள்ளி ஊராட்சியில் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட உள்ள இடத்தைப் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு விநியோகிப்படும் தினசரி குடிநீரின் விவரம் குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் தொடா் மழையின் காரணமாக நீா்வரத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா ஆய்வு மேற்கொண்டாா். உடன், துறைசாா்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனா்.