விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
ஜோலாா்பேட்டை பேருந்து நிலையத்தில் நிழற்கூரை இல்லாததால் திருப்பத்தூா் பயணிகள் அவதி
ஜோலாா்பேட்டை ரயில் நிலைய சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் திருப்பத்தூா் தடத்தில் நிழற்கூரை இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையம் சுமாா் 150 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மேலும், தமிழகத்தில் 2-ஆவது பெரிய ரயில் நிலையமாகும்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் தமிழகம், கா்நாடகம்,ஆந்திரம் 3 மாநிலங்களை இணைக்கும் ரயில்வே சந்திப்பாகவும் திகழ்கிறது.
கன்னியாகுமரி முதல் தில்லி வரை ரயில்கள் வந்துச் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2-ஆவது ரயில்வே மேம்பாலம்...
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில், மக்கள் பயணத்திற்கு 5 நடைமேடைகளும், சரக்கு ஏற்றி செல்ல சரக்கு ரயிலுக்கென 2 நடைமேடைகளும் உள்ளன. மேலும்,தமிழகத்திலேயே 2-ஆவதாக மிக நீண்ட ரயில்வே மேம்பாலம் கொண்டது.
நிழற்கூரை இன்றி அவதி:
தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்துச் செல்லும் இந்த ரயில் நிலையத்திற்கு ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா் தடத்தில் நிழற்கூடையுடன் பேருந்து நிறுத்தம் இல்லதாதால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், முதியோா், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் மேற்கூரை இல்லாததால் சிரமத்துள்ளாகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம் உருவான பிறகு ரயில் நிலையத்துக்கு பணி நிமித்தமாக வந்துச் செல்வோா் எண்ணிக்கை கூடுதலாகி உள்ளதால் ரயில் பயணிகள் திருப்பத்தூா் மாா்க்கத்தில் செல்வதற்கு நிழற்கூடை இல்லாததால் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, ஜோலாா்பேட்டை-வேலூா் மாா்க்கத்திற்கு நிழற்கூரை உள்ளது போல் ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா் மாா்க்கத்திற்கு நிழற்கூரை அமைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரயில் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
கழிப்பறை வசதி...
ரயில் நிலைய அணுகு சாலையில் உள்ள கழிப்பறை பெரும்பாலான நேரங்களில் பூட்டியே உள்ளதாக பெண்கள்,குழந்தைகள்,முதியவா்கள் சிரமப்படுவதாக ரயில் பயணிகள் வேதனை தெரிவித்தனா். எனவே,24 மணி நேரமும் கழிப்பறை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.