டங்ஸ்டன் சுரங்கம் கூடாது: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
நமது நிருபர்
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு உரிமம் வழங்கும் முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் புதன்கிழமை வலியுறுத்தினர்.
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் டிசம்பர் 9-ஆம் தேதி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டபோது டங்ஸ்டன் விவகாரத்தை முதல் நபராக எழுப்பி நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி பேசியதாவது:
மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை அளிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்தப் பிரச்னை பல முக்கியமான சுற்றுச்சூழல், கலாசார, சமூக மற்றும் கூட்டாட்சி மீதான தாக்கங்களைக் கொண்டுள்ளது. அந்தப் பகுதியையும், அதன் மக்களையும் பாதுகாக்க உடனடித் தலையீடு தேவைப்படுகிறது.
சுரங்க உரிம நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சுரங்க உரிமம் வழங்குவதற்கு முன்பு மாநில அரசுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கத் தவறியதை மேற்கோள்காட்டியும் இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தை நிறுத்துமாறு மத்திய அரசுக்கு தமிழக முதல்வரும் கடிதம் எழுதியுள்ளார்.
அப்பகுதி ஒரு மிக முக்கியமான பல்லுயிர் பாதுகாக்கப்பட்ட இடமாகும். அங்கு சமணர் நினைவுச் சின்னங்கள் இருப்பதால், கலாசார ரீதியாக நமக்கு மிகவும் முக்கியமான பகுதியாகும். முதல் தமிழ்க் கல்வெட்டுகளில் ஒன்று அப்பகுதியில் காணப்படுகிறது. விவசாய உற்பத்திக்கும், விவசாயிகளுக்கும் இந்தச் சுரங்கம் அமைவது பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, இத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றார்.
மக்களவை திமுக குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினருமான டி.ஆர். பாலு, "இந்த சுரங்க உரிமத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தனியாருக்கு இச்சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ஒதுக்கீடு செய்தது தவறு' என்றார்.
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பி.மாணிக்கம் தாகூர் பேசுகையில், "அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டும். மதுரை அழகர்கோவிலுக்கும் அரிட்டாபட்டிக்கும் இடையே ஏராளமான இடங்களில் நிரம்பி இருக்கக்கூடிய டங்ஸ்டன் கனிம வளத்தை வேதாந்தா ஜிங்க் நிறுவனத்துக்கு கொடுக்கத் திட்டமிடும் மத்திய அரசின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழகர்கோவில் போன்ற தமிழ்நாட்டின் புனிதத் தலங்களின் முக்கியத்துவத்தை அழித்தொழிக்க பாஜக ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. கடவுளை ஆதரிப்பார்களா அல்லது வேதாந்தாவை ஆதரிப்பார்களா எனும் ஒரு கேள்வியை பாஜகவிடம் முன்வைத்தால் திட்டவட்டமாக வேதாந்தாவின் பக்கம்தான் இருப்பார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சுரங்க உரிமத்துக்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்றார்.