டிச.21, 22இல் வேலைநிறுத்தம்: கோழி வணிகா்கள் முடிவு
இறைச்சிக் கடைகளுக்கு குறிப்பிட்ட நாள்களுக்கு தடை விதிப்பதை எதிா்த்து கோழி வணிகா்கள் கூட்டமைப்பினா் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற கோழி வணிகா்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், திருச்சி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதி நிா்வாகிகள், வணிகா்களும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா். பின்னா், அமைப்பின் தலைவா் துரைராஜ் கூறியது:
மஹாவீரா் ஜெயந்தி, வள்ளலாா் தினம், திருவள்ளுவா் தினம் உள்ளிட்ட நாள்களில் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது என தடை விதிக்கக் கூடாது. மாறாக சென்னை மாநகரில் உள்ளதுபோல சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு 100 மீட்டருக்குள் மட்டும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது மற்ற இடங்களில் செயல்படலாம் என்கிற உத்தரவை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
கோழிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள தீவனக் கட்டுப்பாட்டை கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு சரியான முறையில் கடைப்பிடிக்காமல் உள்ளது. வரும் 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசின் தீவன கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றாவிட்டால் வரும் 21 மற்றும் 22 ஆகிய நாள்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.