நெல்லை: லஞ்சப் புகாரில் சிக்கவைக்க சதி; மேலும் இருவர் கைது- செல்போன் உரையாடலால் ...
`டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை வைத்த விருந்து?’ - முடித்த கையோடு அவசர டெல்லி பயணம்!
சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் களத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசியல் புள்ளிகளின் கட்சி மாற்றம், கூட்டணி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
முக்கியமாக அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிரடி மாற்றங்களுக்காக அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது. அண்ணாமலைக்கு பாஜகவில் பவர்ஃபுல்லான பதவி கிடைக்க போகிறது, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் மூலம் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

வீட்டில் விருந்து வைத்த அண்ணாமலை?
கோவையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகி இல்ல விழாவில், அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. அமமுக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் கடந்த சில நாள்களுக்கு முன்பே கோவை வந்துவிட்டார்.
அண்ணாமலை தன்னை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைப்பதாக தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் கோவை வீட்டில் அவர் தினகரனை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரனுக்கு அண்ணாமலை வீட்டில் விருந்து வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு அண்ணாமலை கோவையில் இருந்து டெல்லி சென்றுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, " எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைய இருக்கின்றன. இதுதொடர்பாக எங்கள் கட்சி தேசிய தலைவர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கிறேன்.
கூட்டணியில் இருந்து விலகியவர்களை இணைக்கும் பணியை, டெல்லி தலைவர்கள் மாநில தலைவர் பார்த்துக் கொள்வார்கள். கூட்டணியில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களுடன் நட்பை தொடர வேண்டும் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒதுக்கிவிட்டனர். எங்கள் கூட்டணியில் இன்னும் வர வேண்டியவர்கள் இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்." என்றார்.











