டிராவிஸ் ஹெட்டை கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிட்ட ரிக்கி பாண்டிங்..!
பார்டர் - கவாஸ்கர் தொடரில் டிராவிஸ் ஹெட் அடிலெய்டில் 140 ரன்கள் குவித்தார். அதன்மூலம் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஹெட்.
கடந்த 18 மாதங்களாக டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் 163 ரன்கள், ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 137 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இவரை பலரும் ஆஸி.யின் லெஜண்ட் கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடுகிறார்கள்.
3ஆவது டெஸ்ட் டிச.14ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
தலைசிறந்த வீரராக மாறி வருகிறார். தற்போதைக்கு டிராவிஸ் ஹெட் தலைசிறந்த வீரர் என்று கூறமுடியாது. ஆனால், விரைவில் அந்த நிலையை அடைந்துவிடுவார். பல நேரங்களில் அணிக்கு தேவைப்படும்போது சிறப்பாக விளையாடியுள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதி, இறுதிப் போட்டிகள், ஆஷஸ் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நினைத்துப் பாருங்கள். டிராவிஸ் ஹெட் இதுமாதிரி கணங்களில் தனித்து நிற்கிறார்.
ஹெட் கிட்டதட்ட கில்கிறிஸ்ட் மாதிரி விளையாடுகிறார். கில்கிறிஸ்ட் 6,7ஆவது இடத்தில் விளையாடுவார். ஆனால், ஹெட் சிறிது முன்பாக 5ஆவது இடத்தில் விளையாடுகிறார். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் விளையாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது.
டிராவிஸ் ஹெட்டின் மனப்பான்மைதான் அவரை அப்படி ஆடவைக்கிறது. ஆட்டமிழக்க பயப்படுவதில்லை, எதிர்மறையான விஷயங்களுக்கு கவலைப்படுவதில்லை. அவர் செய்யும் அனைத்திலும் நேர்மறையானவற்றையே பார்க்கிறார் என்றார்.