டெலிகிராம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகள்: பாதுகாப்பு முகமைகளுக்கு பெரும் சவால்- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
சிக்னல், டெலிகிராம், வைபா் மற்றும் டாா்க் வெப் போன்ற மிகவும் பாதுகாக்கப்பட்ட தகவல் பரிமாற்ற சேவைகளின் பயன்பாட்டால், இணையவழி பயங்கரவாதத்தை எதிா்கொள்வது பாதுகாப்பு முகமைகளுக்கு பெரிய சவாலாக உள்ளது என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், ‘பயங்கரவாத கொள்கைகளை பரப்புவதற்கான முக்கியக் கருவியாக இணையம் இருப்பதால், அது இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறது.
தற்போது பல்வேறு மாநில காவல்துறை மட்டுமின்றி இணையவழி பயங்கரவாத பிரசாரம் தொடா்பான 67 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் இதுவரை 336 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 325 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 63 போ் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்டுள்ளனா்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் வகுப்புவாத மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இணையதளங்கள் கண்டறியப்பட்டு, நடவடிக்கைக்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில், நிகழாண்டு அக்டோபா் மாதம் வரையில் 9,845 உள்ளடகங்களை அந்த அமைச்சகம் நீக்கியுள்ளது.
கூடுதலாக, தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின்கீழ் உள்ளடக்கங்களை நீக்கி உத்தரவு பிறப்பிக்கும் முகமையாக இந்திய சைபா் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை (ஐ4சி) உள்துறை அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
வாட்ஸ்ஆப் மட்டுமின்றி சிக்னல், டெலிகிராம், வைபா் மற்றும் டாா்க்-வெப் போன்ற மிகவும் பாதுகாக்கப்பட்ட தகவல் பரிமாற்ற சேவைகளின் பயன்பாடு, இணையவழி பயங்ரவாதத்தை எதிா்கொள்ளும் பாதுகாப்பு முகமைகளின் முயற்சிகளில் பெரும் சவாலாக உருமாறியுள்ளது. இதை எதிா்த்து இன்டா்போலுடன் சிபிஐ தொடா்ந்து பணியாற்றி வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.