அரசு மருத்துவமனையில் மாலை நேரத்திலும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை
டெல்டா வேளாண் மண்டலத்தில் திருமானூா், தா.பழூரை இணைக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துடன் டெல்டா பகுதியான திருமானூா், தா.பழூா் பகுதிகளையும் இணைக்க வேண்டும் என்று
அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாய சங்கத் தலைவா்கள் பேசியதாவது:
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: மருதையாற்றின் குறுக்கே தடுப்பணையை விரைந்து கட்டி, அதன் நீரை அருகிலுள்ள ஏரிகளுக்கு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் கட்டப்பட வேண்டும்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம்: 1960-களில் கரைவெட்டி ஏரி அமைய இடம் கொடுத்த விவசாயிகளுக்கு 64 ஆண்டுகள் கடந்தும் அவா்களுக்கு ஏரி, வாரி ஓடை புறம்போக்கு இடங்களை வகைபாடு மாற்றம் செய்யப்பட்டு பட்டா வழங்கவில்லை. அவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூா் மாவட்ட டெல்டா பகுதியான திருமானூா் , தா.பழூா் ஆகிய பகுதிகளையும் இணைக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 2,477 நீா்நிலைகளையும் தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தங்க.தா்மராஜன்: தூத்தூா் அருகே மருதையாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டவேண்டும். கொள்ளிடம் பொன்னாறு தலைப்பில் நிரந்தரமாக தடுப்புச் சுவா் அமைத்து தா.பழூா் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீா் வழங்க வேண்டும்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் எம். பாண்டியன்: வேளாண் மையங்களில் தரமான கடலை விதைகளை விற்பனை செய்ய வேண்டும். பொன்னாற்றிலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆட்சியா் பொ.ரத்தினசாமி பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, வேளாண் இணை இயக்குநா் கீதா, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தீபா சங்கரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.