தடுப்பணையில் குளிக்க சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், கள்ளிப்பாடியில் தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவன் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கள்ளிப்பாடியைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் சக்தி (14). இவா் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இவா் கள்ளிப்பாடியில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிக்க முற்பட்டபோது நீரில் மூழ்கினாா்.
இதுகுறித்த தகவலின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து பல மணிநேரம் தேடலுக்குப் பிறகு, வெள்ளாற்றின் கரையோரத்தில் கருவேல மரத்தின் முட்புதரில் சக்தியின் சடலத்தை மீட்டனா்.
ஸ்ரீமுஷ்ணம் காவல் காவல்துறையினா் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனா்.