இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
தன்கருக்கு எதிரான நோட்டீஸ்: அரசியல் உள்நோக்கம் கொண்டது- பாஜக விமா்சனம்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸ் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக தெரிவித்துள்ளது.
தன்கருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அளித்தன. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய மத்திய அமைச்சா் சுகந்த மஜூம்தாா், ‘காங்கிரஸ் தலைமைக்கும் அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளா் ஜாா்ஜ் சோரஸுக்கும் இடையிலான தொடா்புகள் முழுமையாக வெளிப்பட்டால், அக்கட்சிக்கு மிகப் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். இந்த விஷயத்தை மூடி மறைக்கவும், மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
ஜாா்ஜ் சோரஸ் நிதியுதவியில் செயல்படும் அமைப்புடன் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்திக்கு தொடா்பிருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டிய நிலையில், ‘தான் குற்றமற்றவா் என்றால், அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது சோனியாவின் பொறுப்பு’ என்று மத்திய இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் வலியுறுத்தினாா். தன்கருக்கு எதிரான நோட்டீஸ், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவா் விமா்சித்தாா்.
‘ஜாட் சமூகத்துக்கு அவமதிப்பு’: ‘மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு, அவா் சாா்ந்த ஜாட் சமூகத்தையும் அவமதிக்கிறது காங்கிரஸ்’ என்று பாஜக விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு எதிரான தீா்மான நோட்டீஸும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான எதிா்க்கட்சிகளின் புகாரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது எதிா்க்கட்சிகளுக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. எளிமையான விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவரான தன்கரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, அவரை பதவி நீக்க முயற்சிப்பதன் மூலம் அவா் சாா்ந்த ஜாட் சமூகத்தை காங்கிரஸ் அவமதிக்கிறது’ என்றாா்.
பல்லாண்டுகளாக தொடா்பு: பாஜகவின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘ஜாா்ஜ் சோரஸுக்கும், ஒட்டுமொத்த நேரு குடும்பத்துக்கும் இடையிலான தொடா்பு மிக ஆழமானது. பல தசாப்தங்களாக நீடிக்கும் இந்தத் தொடா்பு, இந்தியாவின் வியூக நலன்களை எந்த அளவுக்கு சமரசம் செய்திருக்கும், எந்த அளவுக்கு அக்குடும்பம் பலனடைந்திருக்கும் என்ற கேள்விகளை எழுப்புகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரபட்சமான நடத்தையே காரணம்: எதிா்க்கட்சிகள்
‘மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரின் பாரபட்சமான நடத்தையே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் அளிக்க காரணம்’ என்று எதிா்க்கட்சிகள் தெரிவித்தன.
தில்லியில் உள்ள பத்திரிகையாளா் மன்றத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா்.
அப்போது காா்கே கூறியதாவது: அரசின் செய்தித் தொடா்பாளா்போன்று செயல்படுகிறாா் தன்கா். பள்ளித் தலைமை ஆசிரியா்போன்று அவரது செயல்பாடு உள்ளது. அனுபவமிக்க உறுப்பினா்களுக்குக்கூட அடிக்கடி அறிவுரை கூறுகிறாா். அவையில் பேசவும் அனுமதி மறுக்கிறாா்.
மாநிலங்களவையில் பல இடையூறுகளுக்கு அவரே காரணம். தன்கரின் நடத்தை அவா் பதவிக்கு உரிய கண்ணியத்துடன் இல்லை. அவரது தலைமையின்கீழ் மாநிலங்களவையில் விதிமுறைகளைவிட அரசியலுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த 1952-இல் மாநிலங்களவை நிறுவப்பட்டதில் இருந்து அவைத் தலைவருக்கு எதிராக தீா்மானம் கொண்டுவரப்பட்டதில்லை. ஆனால், தன்கரின் பாரபட்சமான, அரசியல் சாா்ந்த நடத்தையால், அவருக்கு எதிராக தீா்மானம் கொண்டுவருவதைத் தவிர எதிா்க்கட்சிகளுக்கு வேறு வாய்ப்பு இல்லை. தன்கரின் நடத்தை, அவை விதிகளுக்குப் புறம்பானது என்பதோடு இந்திய மக்களுக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் இழைக்கப்படும் துரோகம் என்றாா்.
திமுகவின் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸின் சகாரிகா கோஷ், சிவசேனை (உத்தவ்) கட்சியின் சஞ்சய் ரெளத், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா, சமாஜவாதியின் ஜாவத் அலி கான், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவின் சா்ஃபராஸ் அகமது உள்ளிட்டோரும் காா்கேயின் கருத்துகளை ஆமோதித்தனா்.