வன்னியரசை கவனித்த ஆனந்த்; அமைச்சர்களுக்கு நடுவே ஒரு பவர் சென்டர்! - சிங்கப்பெண் ...
`தமிழக முதல்வர் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்கிறார்; ஆனால்..!' - நீதிபதி விமர்சனம்!
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், `சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். எங்கள் பகுதியைச் சார்ந்தவர் என்பதால் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் மொபைல் போனிலிருந்து எனது தாயாருக்கு கடந்த மாதம் போன் வந்தது, அதில் நான் காதலித்து ஏமாற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் என்னை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வர வைத்தனர். விசாரணையில் காதலித்து ஏமாற்றியதாக என் மீது புகார் கொடுக்கப்பட்டதாகக் கூறினர். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்ய வலியுறுத்தியதோடு அருகில் உள்ள கோவிலில் தாலி கட்டுவது போல் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இதில் எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. நான் அந்த பெண்ணை காதலிக்கவும் கிடையாது. ஆனால் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருகின்றனர். எனவே போலீஸார் என்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக உள்ளாரா? என்பது குறித்து முழு பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளம் பெண்ணின் மருத்துவ அறிக்கை துண்டு சீட்டை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
இதனைப் பார்த்த நீதிபதி கடும் கோபமடைந்தார். ``இந்த வழக்கில் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல் நலம் குறித்து முழுமையாக பரிசோதனை செய்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் டீம் அறிக்கை தாக்கல் செய்ய நான் உத்தரவு பிறப்பித்தேன். ஆனால் மருத்துவக் கல்லூரி தரப்பில், அந்தப் பெண்ணின் கருக்கலைப்பு குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது மிகுந்த அதிர்ச்சியை எனக்கு ஏற்படுத்துகிறது.

உடல்நலம் குறித்து பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னால், அந்தப் பெண்ணின் கருக்கலைப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மருத்துவக் கல்லூரியின் டீன் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு நபர்... இவ்வாறு எப்படிச் செயல்பட்டார் என்பது இந்த நீதிமன்றத்திற்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
நீதிமன்றம் பிறப்பித்தது இளம் பெண்ணின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை. ஆனால் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி டீன் கொடுத்துள்ளது, கருக்கலைப்பு செய்ய தகுதியானவரா என்பது குறித்த மருத்துவ அறிக்கை. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

எனவே திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் முதல்வர், நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
தற்போது தமிழக முதல்வர் பெண்களின் பாதுகாப்புக்காக ஆட்சி நடத்துகிறோம் எனக் கூறுகிறார். ஆனால் நடப்பது இது போன்று உள்ளது" எனக் கூறி, வழக்கு விசாரணையை 10-06-2026 தேதிக்கு ஒத்தி வைத்தார்.


















