தமிழகத்தில் ரூ. 33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள்: மத்திய இணை அமைச்சா் தகவல்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ. 33 ஆயிரத்து 467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்றாா் மத்திய ரயில்வே மற்றும் நீா் வளத் துறை இணை அமைச்சா் வி. சோமண்ணா.
தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அம்ருத் பாரத் திட்ட வளா்ச்சிப் பணிகளை வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
ரயில்வே துறையில் தமிழ்நாட்டுக்கு நிகழ் (2025 -26) பட்ஜெட்டில் ரூ. 6 ஆயிரத்து 626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2024 - 25 ஆம் ஆண்டை விட ரூ. 300 கோடி கூடுதல்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ரூ. 33 ஆயிரத்து 467 கோடி மதிப்பில் 22 ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. அம்ருத் பாரத் நிலையத் திட்டத்தில் 77 ரயில் நிலையங்களில் ரூ. 2 ஆயிரத்து 950 கோடிக்கு மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ. 1,460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் நிலையத் திட்டத்தில் ரூ. 12.37 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரூ. 6.50 கோடி மதிப்பிலும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரூ. 13.50 கோடி மதிப்பிலும், காரைக்கால், மாகே ரயில் நிலையங்களில் ரூ. 109 கோடியிலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு, கா்நாடகம், கேரளத்தில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட மத்திய அரசு அரசியல் செய்யாமல் நிறைய வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பட்டுக்கோட்டை - தஞ்சாவூா் - அரியலூா் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் சோமண்ணா.
ஆய்வின்போது, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன், முதன்மை திட்ட மேலாளா் நசீா் அகமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.