தமிழகம் 2024
ஜனவரி
8: தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2 நாள் நடைபெற்றது. இம்மாநாட்டில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11: அதிமுக கொடி, பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.
27: முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார்.
30: கோயில்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில் நுழைவுவாயில், கொடிமரம் மற்றும் முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும் என பழனி முருகன் கோயில் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி
2: தமிழக வெற்றிக் கழகம் என தனது அரசியல் கட்சியின் பெயரை நடிகர் விஜய் அறிவித்தார்.
12: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட வி. செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
12: தமிழக சட்டப்பேரவையின் நிகழாண்டு முதலாவது கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டி, இரண்டே நிமிஷங்களில் உரையை முடித்துக் கொண்டார். பிறகு ஆளுநர் முழுமையாக படிக்காத உரையை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்து தேசிய கீத விவகாரத்தில் அரசின் நிலையை விளக்கியபோது, ஆளுநர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
14: மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம்.
மார்ச்
4: நாட்டிலேயே முதல்முறையாக கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான முதல் உள்நாட்டு விரைவு ஈனுலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
8: ராமநாதபுரத்தில் கடல் வளத்தை பாதுகாக்க தமிழக வனத் துறை சிறப்பு படையை தொடங்கியது.
18: தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
21: சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் க.பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார்.
ஏப்ரல்
18: 2023-2024 நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருள்கள் ஏற்றுமதி செய்து தமிழகம் சாதனை படைத்தது.
மே
27: தமிழகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கடந்த 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 50 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (டிவி ஏசி) வழக்குப் பதிவு.
30: மக்களவைத் தேர்தல் முடிவுற்ற நிலையில் கன்னியாகுமரி வந்த பிரதமர் நரேந்திர மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் 2 நாள்கள் தியானத்தில் ஈடுபட்டார்.
ஜூன்
4: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி.
14: அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' என்ற திட்டம் ஆகஸ்ட் முதல் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
18: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நிலையில், 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
19: கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் ஜூன் மாதத்தில் 220 மில்லி மீட்டர் மழை பதிவானது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஜூலை
1: தமிழ்நாடு முழுவதும் திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு வந்தது.
5: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை.
19: புதிய பள்ளியில் சேரும் போது, ஏற்கெனவே படித்த பழைய பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழை கட்டாயமாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
22: தமிழகம் முழுவதும் 3,500 சதுர அடி வரை கட்டடங்கள் கட்ட இணையவழியிலேயே விண்ணப்பித்து அனுமதி பெறும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
29: சிறப்பான சமூகப் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான 2024-ஆம் ஆண்டு விருதை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சியின் வார்டு உறுப்பினர் சந்தியா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
31: பேரவைக்குள் குட்கா எடுத்து வந்த விவகாரத்தை பேரவைத் தலைவருக்கு மீண்டும் அனுப்புவதுடன், இந்த விவகாரத்தில் பேரவை உரிமைக் குழு உரிய இறுதி முடிவுகளை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
31: தெலங்கானாவிலும் புதுச்சேரியிலும் ஆளுநர் பொறுப்புகளை கூடுதலாக கவனித்து வந்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆகஸ்ட்
1: கீழடியில் 10-ஆவது கட்ட அகழாய்வில் குடிநீர் இணைப்புக்கான அம்சங்கள் இருந்தது கண்டுபிடிப்பு. இதன்மூலம், 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது உறுதியாகிறது.
2: நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 447 பேர் பயன் பெற்றதாக அரசு அதிகாரப்பூர்வ தகவல்.
7: புதுவை துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாஷ்நாதன் பதவியேற்றார்.
17: கொங்கு மண்டல விவசாயிகளின் 60 ஆண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
18: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக தயாரிக்கப்பட்ட ரூ.100 மதிப்பிலான நாணயத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
21: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 28 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 19 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
31: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முக்கியத்துவம் வாய்ந்த அரசுத் துறைகளில் பயன்படுத்துவது தொடர்பாக, கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
செப்டம்பர்
1: சென்னையில் முதல் முறையாக பார்முலா - 4 கார் பந்தயம் நடைபெற்றது.
25: யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை பரிந்துரைக்கப்பட்டது.
26: சிறையில் இருந்த வி.செந்தில் பாலாஜிக்கு, கடுமையான நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
29: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
29: தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டு செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அக்டோபர்
6: இந்திய விமானப் படையில் 92-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை நேரில் காண 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடினர். இதில் நெரிசலால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்தனர்.
7: சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே விழுந்தன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர்.
27: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அதன் தலைவர் விஜய் தலைமையில் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
நவம்பர்
8: பாம்புக் கடியை அறிவிக்கக் கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்தது.
22: திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ. 330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
30: வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. புயல் பாதிப்பு காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர்
1: கனமழை காரணமாக திருவண்ணாமலையில் மண் சரிவு. ஏழு பேர் மாயமானதாக அறிவிப்பு.
3: புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
9: டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.
17: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷுக்கு பரிசாக ரூ. 5 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
20: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் அருகில் இளைஞரை நான்கு பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
23: மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 5, 8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பழைய முறையே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.