தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தமிழ் புத்தாண்டு: `கலைஞர் கருணாநிதியின் அரசாணையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லையா?'
அண்மையில் வெளியான 2026-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலிலும், (அதாவது திமுகவின் நடப்பு ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிற சூழலில், கடைசி ஆண்டிற்கான விடுமுறை தினப் பட்டியல்) `தை’ முதல் நாள் 'பொங்கல்' என்றும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது திமுகவினர் மத்தியிலேயே சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
காலங்காலமாக சித்திரை முதல் தேதிதான் தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் கருணாநிதி, முதல்வராக இருந்த போது அதை மாற்றி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அரசாணை வெளியிட்டார்.
இதை ஒரு சாரார் வரவேற்ற போதும், இன்னொரு தரப்பினர் பழைய மரபை மாற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார்.

2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி தொடர்ந்ததால், சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கலைஞரின் அறிவிப்பான 'தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு' என்கிற அரசாணையை மீண்டும் கொண்டு வரப்படும் என திமுக-வினரும் திமுக அனுதாபிகளான சில தமிழறிஞர்களும் எதிர்பார்த்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட சில தலைவர்களுமே இது தொடராக கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் என்ன காரணமோ முதல்வர் மு.க. ஸ்டாலின் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் நடப்பு ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டான இந்த ஆண்டிலாவது அந்த அறிவிப்பைத் தருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான விடுமுறை தினப் பட்டியலும் தற்போது வெளியாகி அதில் மாற்றம் எதுவும் இல்லை.
இது தொடர்பாக தி.மு.க. வட்டாரத்தில் சிலரிடம் பேசிய போது, 'கலைஞர் தமிழறிஞர்கள் பலரிடம் ஆலோசனை நடத்திதான் அந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதை பிறகு வந்த ஜெயலலிதா அரசியலுக்காக அதனை பழையபடி மாற்றிவிட்டார்.
அதைத் திரும்ப கொண்டு வருவதற்கு எதுக்கு தயக்கம் காட்ட வேண்டும் என்று தெரியவில்லை. மெஜாரிட்டி அரசு இருக்கும் சூழல்ல இதை உடனே செய்வார் என்று நினைத்தோம். ஆனால் என்னவென்றே தெரியவில்லைை, கடைசி வரை தளபதி செய்யவே இல்லை' என ஆதங்கப் படுகின்றனர்.

சமூக வலைதளங்களில் பலர் இது தொடர்பான தங்கள் ஆதங்கங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
வேறு சிலர், திமுக இதில் இரட்டை வேடம் போடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததுதான். அரசாணையில் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லிவிட்டு பொங்கலுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பரிசுத் தொகுப்பில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கின்றனர்.
அதிமுகவினரைக் கேட்டால், `சித்திரை முதல் நாள்தான் தமிழ் வருடம் தொடங்குகிறது என்று முதல்வர் ஏற்றுக்கொண்டார் என்று நினைக்கிறோம். இல்லாவிட்டால் மாற்றியிருப்பாரே. அப்பா போட்ட ஆர்டரில் மகனுக்கே உடன்பாடு இல்லை போல என்று தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்கின்றனர்.




















