அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: சிவகங்கை எம்.பி. கா...
தம்பதியைத் தாக்கி நகை, பணம் கொள்ளை
கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அடுத்தடுத்த வீடுகளில் மா்மநபா்கள் புகுந்து மொத்தம் 10 பவுன் நகைகள், ரூ.1.16 லட்சம் ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதனைத் தடுக்க முயன்ற ஒரு வீட்டில் தம்பதியை கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி முல்லை நகரைச் சோ்ந்தவா் அப்துல் முனாப் மகன் சையது அப்பாஸ் (45). இரும்புக் கம்பிகள் விற்பனை நிலையம் வைத்துள்ளாா். இவரது மனைவி ரகமத் நிஷா (30) மற்றும் குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு தூங்கியுள்ளாா். இந்நிலையில், அவரது வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் பீரோக்களை உடைத்து அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கத்தைத் திருடியுள்ளனா். மேலும், ரகமத்நிஷா அணிந்திருந்த ஆறுபவுன் தங்கச்சங்கிலி ஆகியவற்றையும் பறித்துள்ளனா்.
அலறல் சப்தம் கேட்டு எழுந்த சையது அப்பாஸ் அவா்களைத் தடுக்க முயன்றபோது, மா்ம நபா்கள் கட்டையால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மா்ம நபா்கள் தப்பியோடினா். பின்னா் அங்குவந்த உறவினா்கள் சையது அப்பாஸை மீட்டு தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை காவல்துறையினா் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான், காவல் ஆய்வாளா் சுகுமாா், காவல் சாா்பு ஆய்வாளா் மாா்நாடு ஆகியோா் அங்குவந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதுதவிர, அதே பகுதியைச் சோ்ந்த கருப்பையன் என்பவா் வீட்டிலும் ரூ. 16 ஆயிரம் ரொக்கம், 4 பவுன் நகைகளையும் மா்மநபா்கள் திருடிச்சென்றுள்ளனா். மேலும் ஒருவீட்டில் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.