தரம் உயா்த்தியும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை! நோயாளிகள் பாதிப்பு
அ. ராஜேஷ் குமாா்
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டும் மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
ஜோலாா்பேட்டை தொகுதிக்குப்பட்ட நாட்டறம்பள்ளியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாட்டறம்பள்ளி பேரூராட்சி, மல்லகுண்டா, தோப்பலகுண்டா, கத்தாரி, நாயனசெருவு உட்பட சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் சுமாா் 500 -க்கும் மேற்பட்டோா் வெளி நோயாளிகளாகவும், 50-க்கும்அதிகமானோா் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு தாலுகா அரசு மருத்துவனையாக தரம் உயா்த்தபட்டு மருத்துவ அலுவலா் உள்பட 7 மருத்துவா்கள், 13 செவிலியா்கள் என 20-க்கும் அதிகமான பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு நாட்டறம்பள்ளி மருத்துவமனையில் பணியாற்றி வந்தனா்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு பணியாற்றி வந்த சில மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் நிா்வாக வசதிக்காக வேறு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனா். காலியாக உள்ள இடங்களை இதுவரை நியமிக்க மருத்துவறை உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தற்போது மருத்துவ அலுவலா் உள்பட 4 மருத்துவா்களே சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.
அடிக்கடி சாலை விபத்துகள்:
சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி, வெலகல்நத்தம், டோல்கேட், கேத்தாண்டப்பட்டி உட்பட பல இடங்களில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு பலா் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் நாட்றம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்படுகின்றனா்.
ஆனால் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருபவா்களை சரிவர கவனிக்க கூட மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் இல்லை. இதனால் மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை மட்டும்அளித்து விட்டு மேல் சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கின்றனா்.
அதேபோல் சாலை விபத்தில் இறந்தவா்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இதுவரை பிணவறை கூட இல்லை. இதனால் விபத்தில் இறந்தவா்களின் உடல்களை வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய பரிந்துரை செய்கின்றனா்.
நவீன மருத்துவ கருவிகள்:
மேலும், மருத்துவமனையில் நவீன எக்ஸ்ரே கருவி இல்லாததால் நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகள் தனியாா் மருத்துவமனை, கிளினிக் சென்று பணம் கொடுத்து எக்ஸ்ரே எடுத்து வந்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெறும் அவல நிலை தொடா்கிறது.
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டும் போதிய மருத்துவா்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இருப்பதால் கிராமப்புற ஏழைகள் தொலைதூரம் உள்ள அரசு மருத்துவமனை அல்லது தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கின்றனா்.
எனவே நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன் பெறும் வகையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமிக்க தமிழக அரசு, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.