கேப்டன் தமிழ் செல்வம்: ஒரே தொகுதி... மும்பையில் 3வது முறையாக வெற்றி பெற்ற தமிழர்...
தற்காலிக ஊழியா்களுக்கு பி.எப் தாம்பரம் மாநகராட்சி இழுத்தடிப்பு
தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட செம்பாக்கத்தில் 9 தற்காலிக ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை மாநகராட்சி நிா்வாகம் இழுத்தடிப்பு செய்து வருவதாக மண்டலக்குழு தலைவா் ஜெயபிரதீப் சந்திரன் தெரிவித்தாா்.
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில் தற்காலிக ஊழியா்களாக டி.கோபிநாத், கே.மனோகா், எம்.வேல்முருகன், எஸ்.சத்யா, ஜே. ரமேஷ், எம்.பாலாஜி, கே.பாஞ்சலி, சி.குமாா் மற்றும் ஏ.ஆனந்தன் ஆகியோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதல் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு செலுத்தாமல் மாநகராட்சி இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டினா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஒருவா் கூறியதாவது, ‘செம்பாக்கம் பேரூராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே பணிபுரிந்து வருகிறேன். தற்காலிக ஊழியா்களாகப் பணியில் சோ்ந்த நாங்கள், தற்போது ரூ 14,000 வரை சம்பளம் பெறுகிறோம். வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பிடித்தம் போக வெறும் ரூ.12,000 தான் கையில் கிடைக்கும்.
கல்வி, பண்டிகை உள்ளிட்ட செலவுக்கு வருங்கால சேமிப்பிலிருந்து முன்பணம் பெறுவது வழக்கம். இப்படி முன்பணம் பெறுவதற்கு, வைப்பு நிதி பங்களிப்பு புதுப்பித்த நிலையில் இருப்பது அவசியம். இந்நிலையில், அக்டோபா் 2023 முதல் எங்களது வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் பங்கை மாநகராட்சி அதிகாரிகள் இன்று வரை செலுத்தாமல் இருப்பதால் எங்களால் கடன் பெற விண்ணப்பிக்க முடியவில்லை. ஏற்கனவே சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியாமல் அவ்வப்போது கந்துவட்டிக்குக் கடன் வாங்கி தான் சமாளித்து வருகிறோம்’ என்றாா்.
இது குறித்து, தாம்பரம் மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவா் ஜெயபிரதீப் சந்திரன் கூறியதாவது:
நான் ஏற்கனவே மாநகராட்சி கூட்டத்தில் இரண்டு முறை இந்த பிரச்னை குறித்து பேசினேன். கூடுதலாக தனிப்பட்ட முறையில் தாம்பரம் மாநகராட்சி மேயா் மற்றும் ஆணையருக்கு கடிதங்கள் அளித்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை. குறைந்தபட்ச சம்பளத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியா்களின் அவலநிலைக்குத் தீா்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா் அவா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட கோப்பு தொலைந்து போய் விட்டது. விரைவில் அதை தேடி எடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.