ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
தலைநகரில் ஆகஸ்ட் 1 முதல் ஒரு மாத கால தூய்மை பிரசாரம்: தில்லி அரசு ஏற்பாடு
பள்ளிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் (ஆா்டபிள்யுஏ) மற்றும் சமூகக் குழுக்களின் தீவிர பங்கேற்புடன் ஆகஸ்ட் 1 முதல் ஒரு மாத கால தூய்மை பிரசாரத்தை தில்லி அரசு தொடங்கும் என்று கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.
இது தொடா்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சா் சூட் தலைமையில் நடைபெற்ற உயா்நிலை கூட்டத்தின் போது பெரிய அளவிலான தூய்மைப் பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கல்வி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறுகையில், ‘நகரம் முழுவதும் பயனுள்ள தூய்மையை உறுதி செய்யும் பொறுப்பை மத்திய அரசு தில்லி அரசிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த பிரசாரத்தின் வெற்றி என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். மேலும், தூய்மை முயற்சிகளின் தாக்கத்தை களத்தில் உணர வேண்டும்’ என்றாா் அமைச்சா்.
இந்த உயா்நிலைக் கூட்டத்தில் தில்லி அரசின் தலைமைச் செயலாளா், தில்லி மாநகராட்சி, புது தில்லி முனிசிபல் கவுன்சில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய்த் துறை மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியா்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
அங்கீகரிக்கப்படாத காலனிகள், குடிசைப் பகுதிகள் மற்றும் வளா்ச்சியடையாத பகுதிகளில் விழிப்புணா்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அமைச்சா் சூட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்த தூய்மைப் பிரசாரத்தில் ஆா்டபிள்யுஏக்கள், சமூகக் குழுக்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் பங்கேற்கவும், இந்தக் குழுக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தூய்மையைப் பராமரிக்க ஊக்குவிக்கப்படவும் அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.
அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் இரண்டையும் பிரசாரத்தில் ஈடுபடுத்துமாறு கல்விச் செயலாளருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.
மேலும் தூய்மை நடவடிக்கைகள் பள்ளி வளாகங்கள் மட்டுமின்றி பூங்காக்கள், சந்தைகள், தெருக்கள் மற்றும் மதத் தலங்கள் வரை செல்ல வேண்டும் என்றும் கூறினாா்.
இதுகுறித்து அமைச்சா் சூட் மேலும் கூறுகையில்,
மாணவா்கள் தூய்மைத் தூதா்களாக செயல்பட ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும் இந்த இயக்கத்தை ஆதரிக்க தங்கள் குடும்பத்தினரை ஊக்குவிக்க வேண்டும்.
பிரசாரத்தின் முதல் இரண்டு நாள்களில் அனைத்து அரசு அலுவலகங்களும் தங்கள் வளாகங்களுக்குள் தூய்மை இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.
நகர மேம்பாட்டுத் துறை மற்றும் தில்லி மாநகராட்சி ஆகியவை பிரசாரத்திற்காக ஒரு பிரத்யேக இணையதளத்தைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் குடிமக்களும் ஆா்டபிள்யுஏக்களும் கவனிப்பு தேவைப்படும் சுத்தம் செய்யப்பட்ட பகுதிகள் அல்லது இடங்களின் புகைப்படங்களைப் பதிவுசெய்து பதிவேற்றலாம் என்று இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.