தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்த டிரைவர்; மும்பை பஸ் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 7-ஆக அதிகரிப்பு!
மும்பையில் நேற்று முன் தினம் இரவு குர்லா பகுதியில் மாநகராட்சி பேருந்து சாலையோரம் இருந்த வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். பாதசாரிகள், பேருந்தில் பயணம் செய்தவர்கள் என மொத்தம் 42 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்தவர்களும், காயம் அடைந்தவர்களும் ஆங்காங்கே ரோட்டில் கிடந்தனர். தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் வந்து அவர்களை மீட்டனர். விபத்துக்குள்ளான பேருந்தை ஓட்டிய சஞ்சய் மோரே மீது கொலைக்கு நிகரான வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பேருந்தை ஓட்டியபோது டிரைவர் மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. டிரைவர் சஞ்சய் மோரே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்த இடம் குர்லா ரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் நடந்தது. சம்பவம் நடந்த இடம் எப்போதும் மக்கள் நெருக்கடி மிகுந்து காணப்படுவது வழக்கமாகும்.
விபத்தை ஏற்படுத்திய டிரைவரிடம் விசாரித்த போது ஆரம்பத்தில் பஸ் பிரேக் பிடிக்காத காரணத்தால்தான் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார். அதன் பிறகு தவறுதலாக பதட்டத்தில் ஆக்சிலேடரை மிதித்த காரணத்தால் விபத்து நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தியது எலக்ட்ரிக் பேருந்து ஆகும். அதனை அதிகாரிகள் சோதனை செய்தனர். பேருந்து தானியங்கி டிரைவிங் முறையை கொண்டது ஆகும். இதனால் டிரைவருக்கு குழப்பம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. டிரைவர் சஞ்சய் மோரே கடந்த ஒன்றாம் தேதிதான் பணியில் சேர்ந்திருந்தார். அவருக்கு பேருந்தை எப்படி இயக்கவேண்டும் என்று மூன்று நாட்கள் பயிற்சி கொடுக்கப்பட்டதாக பெஸ்ட் செய்தித் தொடர்பாளர் சாமந்த் தெரிவித்தார்.
வழக்கமாக 7 நாட்கள் பயிற்சி கொடுக்கப்படவேண்டும். ஆனால் சஞ்சயிக்கு வெறும் 3 நாட்கள் மட்டுமே பயிற்சி கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் சஞ்சய் கடந்த 33 ஆண்டுகளாக எந்த விபத்தையும் ஏற்படுத்தியது கிடையாது என்று அவரது மகன் தீபக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீபக் அளித்த பேட்டியில், ''கடந்த 33 ஆண்டுகளில் தந்தை வாகனம் ஓட்டியபோது ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. எங்களது தந்தையை கைது செய்ததைக்கூட எங்களுக்கு போலீஸார் தெரிவிக்கவில்லை. டி.வி செய்தியை பார்த்துதான் தெரிந்து கொண்டோம்'' என்றார். விபத்துக்குள்ளான பேருந்து 22 வாகனங்கள் மீது மோதியிருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் மும்பையில் நடந்த மிகவும் மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இறந்த பெண்
மாநகராட்சி பேருந்து விபத்தில் இறந்த அப்ரீன் ஷா(19) என்ற பெண் விபத்து நடந்த அன்றுதான் முதல் முறையாக வேலைக்கு சேர்ந்திருந்தார். அவர் முதல் நாள் வேலைக்கு சென்றுவிட்டு நடந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்து மோதியதில் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அப்பெண்ணின் தந்தை அப்துல் ஷா கூறுகையில், ''எனது மகள் எனக்கு போன் செய்து 15 நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று தெரிவித்தார். ஆனால் எனது மகளின் போனில் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் பாபா மருத்துவமனை ஊழியர் உடனே மருத்துவமனைக்கு வரும்படி கேட்டுக்கொண்டார்'' என்றார். இதே போன்று அனம் ஷேக்(20) என்ற பெண் தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பேருந்து மோதியதில், பரிதாபமாக இறந்து போனார்.