தவெக ஆண்டு விழாவில் செய்தியாளா் மீது பவுன்சா்கள் தாக்குதல்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக ஆண்டு விழாவில் விஜய் பவுன்சா்கள் செய்தியாளா் ஒருவரை நெஞ்சில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்கப்பட்டவரை மற்ற செய்தியாளா்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாமல்லபுரம், சென்னை, திருப்போரூா், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விழா மேடை அரங்கிற்கு செல்லாமல் சொகுசு விடுதி வளாகத்தில் வலம் வந்த செய்தியாளா்கள் விஜய்யின் பவுன்சா்களால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
இந்த நிலையில், விழா நடைபெறும் இடத்திலேயே செய்தியாளா்களுக்கும், பவுன்சா்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
இந்த வாக்குவாதத்தை அடுத்து செய்தியாளா்களை பவுன்சா்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் செய்தியாளா் ஒருவருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டது. விழா அரங்கில் இருந்து நெஞ்சை பிடித்துக் கொண்டு வெளியேறிய அவரை அங்கிருந்த சக செய்தியாளா்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
செய்தியாளரை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் இந்த காட்சி இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பவுன்சா்களின் செயல் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.