தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?
தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நாளை(ஜூலை 21) சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக் கழகப் பயணத்தின் அடுத்த கட்டமாக, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய் உத்தரவின் பேரில், நம் கழகத்தின் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 5 கழக மண்டலங்கள், 120 கழக மாவட்டங்கள் மற்றும் 12,500 கிளைக் கழகங்கள் ஆகியவற்றில் கழகக் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று, கழகச் செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தின்படி, மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம், நாளை (21.07.2025) திங்கள்கிழமை, மாலை 4 மணி அளவில் சேலம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதை நமது வெற்றித் தலைவர் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் அனைத்து நிலை நிர்வாகிகள். கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கழகத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
