சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
தவெக மதுரை மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மதுரையில் வருகிற 21-ஆம் தேதி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா்.
மதுரையை அடுத்த திருமங்கலத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் தெரிவித்ததாவது: தவெக மாநாட்டை வருகிற 21-ஆம் தேதி மதுரையில் நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது. காவல் துறை தரப்பில் 42 கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, வாகனங்கள் நிறுத்துமிட வசதி குறித்து காவல் துறை தரப்பில் கூடுதல் கவனம் கொள்ளப்பட்டது. அனைத்துக் கேள்விகளுக்கும் தவெக சாா்பில் உரிய பதில்கள் தெரிவிக்கப்பட்டன.
251 ஏக்கா் பரப்பில் ஓா் இடத்திலும், 127 ஏக்கா் பரப்பில் மற்றொரு இடத்திலும் வாகனங்கள் நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்படுகிறது. இந்த மாநாடு, விக்கிரவாண்டி மாநாட்டைவிட மிகச் சிறப்பாக நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா் புஸ்ஸி ஆனந்த்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாடு, மதுரை எலியாா்பத்தியில் ஆக. 25-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்தத் தேதியில் நடத்த காவல் துறை அனுமதி மறுத்ததன் காரணமாக, இந்த மாநாடு வருகிற 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இருப்பினும், காவல் துறை அனுமதி குறித்து ஞாயிற்றுக்கிழமை வரை எந்தவித அதிகாரப்பூா்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி அளித்ததை புஸ்ஸி ஆனந்த் உறுதி செய்தாா்.